முகக்கவசம், கையுறை அணியாத தூய்மைப் பணியாளர்கள் மீது நடவடிக்கை: மதுரை உட்பட 7 மாநகராட்சிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

முகக்கவசம், கையுறை அணியாத தூய்மைப் பணியாளர்கள் மீது நடவடிக்கை: மதுரை உட்பட 7 மாநகராட்சிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை உட்பட 7 மாநகராட்சிகளில் தூய்மைப் பணியாளர்கள் முகக்கவசம், கையுறை அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். தவறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து துறை முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு ஆடைகள், முகக்கவசங்கள், கையுறைகள் வழங்க உத்தரவிடக்கோரி மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த சத்யமூர்த்தி உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மதுரை மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர் வினோத் ராஜ் நேரில் ஆஜராகி, மதுரை மாநகராட்சியில் 5300 தூய்மை பணியாளர்கள் உள்ளனர்.

அனைவருக்கும் தேவையான முகக்கவசங்கள், கிருமி நாசினிகள், கையுறைகள், பூட்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டாலும், கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மட்டுமே முழு உடலை மறைக்கும் பாதுகாப்பு ஆடை அணிகின்றனர் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், மாநகராட்சி தூய்மை கண்காணிப்பாளர் தினமும் 3 முறை ஆய்வு செய்து தூய்மைப் பணியாளர்கள் முகக்கவசம், கையுறை அணிகின்றார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

முகக்கவசம், கையுறை அணியாதவர்கள் தொடர்பாக புகைப்படத்துடன் மண்டல அலுவலருக்கு தகவல் அளிக்க வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தைகள் மற்றும் குவிக்கப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுவோர் முகக்கவசம், கையுறைகளுடன் பூட்ஸ்கள் அணிவதையும் உறுதிப்படுத்த வேண்டும். இந்த உத்தரவை மதுரை மாநகராட்சி மட்டுமல்லாது, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் வரம்பிற்குட்பட்ட திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகர்கோவில் மாநகராட்சிகளிலும் நடைமுறைபடுத்த வேண்டும்.

தூய்மைப் பணியாளர்கள் யாரேனும் முகக்கவசம், கையுறைகள் இல்லாமல் பணியாற்றினால், அது குறித்து 84284-25000 என்ற எண்ணில் தகவல் அளிக்கலாம் என்றனர். பின்னர், விசாரணை ஜூன்- 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in