Published : 01 Jun 2020 04:24 PM
Last Updated : 01 Jun 2020 04:24 PM

கரோனா தான் எதிரியே தவிர கரோனா நோயாளிகள் அல்ல; அமைச்சர் விஜயபாஸ்கர்

கரோனா தான் எதிரியே தவிர கரோனா நோயாளிகள் நமக்கு எதிரி அல்ல என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (ஜூன் 1) அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

"விமானங்கள், ரயில்கள், இ-பாஸ் பெற்று வரக்கூடியவர்களால் கரோனா தொற்றை சமாளிப்பதில் கூடுதல் சவால் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னையில் மக்கள்தொகை நெருக்கடி ஆகியவை சவால்களாக உள்ளன.

பொது மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே உள்ள 500 படுக்கைகளுடன் சேர்த்து கூடுதலாக 400 படுக்கைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 2-3 நாட்களில் முழுமையாக தயாராகிவிடும்.

மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் 100 நாட்களாக தொடர்ந்து பணி செய்து வருகின்றனர். ஓய்வு பெற்றவர்கள் பணி செய்ய தானாக முன்வருகின்றனர். கூடுதல் மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பெரும்பாலானோர் முகக்கவசம் அணிகின்றனர். அது நல்ல விஷயம். பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியம். சதாரண காய்ச்சல், சளி உள்ளவர்கள் நிச்சயமாக பொது போக்குவரத்தைப் பயன்படுத்தக் கூடாது. கரோனா தான் எதிரியே தவிர கரோனா நோயாளிகள் நமக்கு எதிரி அல்ல. எனவே, நோய் குறித்த வெறுப்பின்றி அவர்கள் பரிசோதனைக்கு வர வேண்டும்.

யாரும் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளக் கூடாது. தாமதமாக மருத்துவமனைக்கு வருபவர்களால் தான் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சவால் ஏற்படுகிறது. மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம். அப்போதுதான் இந்த தொற்றிலிருந்து மீள முடியும்"

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x