Last Updated : 01 Jun, 2020 03:58 PM

 

Published : 01 Jun 2020 03:58 PM
Last Updated : 01 Jun 2020 03:58 PM

இரண்டு மாதத்துக்குப் பிறகு இயக்கப்பட்ட ரயில்கள்; மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்ட பயணிகள்

கரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு மாதமாக ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், கட்டுப்பாடுகளுடன் இன்று இயக்கப்பட்ட ரயில்களில் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனர்.

கரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், மார்ச் 22-ம் தேதி முதல் அனைத்து பொது போக்குவரத்துகளும் முடக்கப்பட்டன. இதில், முக்கிய போக்குவரத்து சேவையான ரயில் சேவையும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால், வெளிமாநிலங்களில் இருந்தவர்கள், வெளி மாவட்டங்களில் இருந்தவர்கள் நடந்தும், சைக்கிள், இருசக்கர வாகனம் எனவும் சிலர் அவ்வழியே வந்த வாகனங்களில் லிஃப்ட் கேட்டும் சொந்த ஊருக்கு சென்றனர். தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டதால் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் பலரும் அரசு ஏற்படுத்திய முகாம்களில் தங்கியிருந்தனர்.

பின்னர், அரசின் ஏற்பாட்டில் சிறப்பு வாகனங்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த வகையில், வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள நிறுவனங்கள், சிமென்ட் ஆலைகளில் வேலை செய்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப சிறப்பு ரயில்களை அரசு ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தது.

இந்நிலையில், கரோனா ஊரடங்கில் 5-ம் கட்டத்தில் உள்ள தமிழகத்தில் இன்று (ஜூன் 1) முதல் பொது போக்குவரத்தில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு சில கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் செல்ல மண்டலங்கள் பிரிக்கப்பட்டு அந்தந்த மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல், நான்கு வழித்தடங்களில் குறைவான ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. அதில் மதுரையிலிருந்து விழுப்புரம் வரை உள்ள வழித்தடத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று இயக்கப்பட்டது.

இதில், அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து விழுப்புரம் செல்ல 12 பயணிகள் முன்பதிவு செய்திருந்த நிலையில், 10 பயணிகள் மட்டும் இன்று பயணத்தை மேற்கொண்டனர். அவர்களை சானிடைசர் மூலம் கைகளை கழுவச் செய்தும், வெப்பமாணி மூலம் உடல்சோதனை செய்தும் ரயில்வே அதிகாரிகள் அனுமதித்தனர். தொடர்ந்து, தனிமனித இடைவெளியுடன் ரயில்வே பிளாட் பாரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு இடைவெளியுடன் ரயிலில் அமரவைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர்.

காத்திருக்கும் பயணிகள்

அதேபோல், இந்த ரயிலில் மதுரை, திண்டுக்கல் மற்றும் திருச்சியிலிருந்து அரியலூருக்கு வருகை புரிந்த 52 பயணிகளையும் தனிமனித இடைவெளியுடன் வெப்பமாணி கொண்டு ரயில்வே அதிகாரிகள் சோதனை செய்தும், இ-பாஸ் மற்றும் பயணச்சீட்டு ஆகியவற்றை பரிசோதனை செய்தும் அனுப்பிவைத்தனர். முழு பாதுகாப்பு ஏற்பாடுகளில் ரயில்வே போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ரயிலில் பயணம் செய்த பயணிகள், முழு பாதுகாப்புடன் பயணம் மேற்கொண்டதாகவும், கிருமி நாசினி, தனிமனித இடைவெளி, வெப்பமாணி, சானிடைசர் போன்றவை பயன்படுத்துவது பாதுகாப்பை உறுதிபடுத்துவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இன்று முதல் நாள் என்பதால் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தொடர்ந்து ரயில்கள் இயக்கப்படும் பட்சத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x