

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 7500 ரூபாய் கரோனா கால நிவாரண நிதி, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்குவதுடன் கூலியை 600 ரூபாயாக உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் - 4 அன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“நாடு முழுவதும் விவசாயத் தொழிலாளர்கள் ஜூன் 4-ம் தேதி போராட்ட நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர். கரோனா ஊரடங்கின் காரணமாக வேலைவாய்ப்பை இழந்து விவசாயத் தொழிலாளர் குடும்பங்கள் வறுமையின் பிடியில் சிக்கி பெருந்துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்தப் பாதிப்பிலிருந்து அவர்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் எவ்வித உதவியும் செய்யாமல் அவர்களை நிர்கதியாக தவிக்கவிட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. எனவே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 7,500 ரூபாய் கரோனா கால நிவாரண உதவியாக வழங்க வேண்டும்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்குவதுடன் கூலியை 600 ரூபாயாக உயர்த்த வேண்டும். மின்சார திருத்தச் சட்டம் 2020ஐ திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
விவசாயத் தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்வதுடன் விவசாயிகள் இப்போராட்டத்தில் பங்கேற்று வெற்றியடையச் செய்திட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது”.
இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.