

சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி மேற்கு வங்க மாநிலத் தொழிலாளர்கள் தூத்துக்குடியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் வெளிமாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல பிஹார், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், மேற்கு வங்க மாநிலத்துக்கு தூத்துக்குடியில் இருந்து இதுவரை சிறப்பு ரயில் இயக்கவில்லை.
உடனடியாக சிறப்பு ரயில் ஏற்பாடு செய்து தங்களையும் சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி 60-க்கும் மேற்பட்ட மேற்கு வங்க தொழிலாளர்கள் தூத்துக்குடியில் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் அனல்மின் நிலைய கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த இந்தத் தொழிலாளர்கள், துறைமுக சாலையில், கடற்கரை சாலை சந்திப்பு அருகே மறியல் செய்ததால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், டிஎஸ்பி பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேற்குவங்க மாநிலத்துக்கு ஒரிரு நாளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். அதில் அனைத்து தொழிலாளர்களும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.