

சென்னையில் இருந்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு வந்த டிஜிபி அலுவலக பெண் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில், கோமதியாபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும், இவருடன் பணிபுரியும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேரும் கடந்த மே மாதம் 28-ம் தேதி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு அவரவர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.
இந்நிலையில், இவருடன் மதுரைக்கு வந்த பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், கன்னியாகுமரிக்குச் சென்ற மற்ற 4 பேரில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால, சங்கரன்கோவிலைச் சேர்ந்த டிஜிபி அலுவலக ஊழியர் தனக்கும் கரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தில் பரிசோதனை செய்துள்ளார். இதில், அவருக்கும் கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இவர், கடந்த 3 நாட்களாக வீட்டில் தனது தாய், தந்தையுடன் இருந்துள்ளார். இவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், அவரது வீடு இருந்த பகுதிக்குள் வெளியாட்கள் செல்லவும், வெளியில் இருந்து யாரும் அங்கு செல்லவும் தடை செய்யப்பட்டது. அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இவரது தந்தை அப்பகுதியில் கடை வைத்துள்ளார். அந்த கடைக்கு ஏராளமான மக்கள் பொருட்கள் வாங்க வந்துள்ளனர். இந்நிலையில், அந்த கடைக்குச் சென்ற மக்கள் தற்போது கரோனா அச்சத்தில் உள்ளனர்.
இதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 44 வயது நபருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர், முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 2 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 70 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் தற்போது 20 பேர் சிகிச்சையில் உள்ளனர்.