

அரிய வகை 'பாம்பே ஓ குரூப்' ரத்தத்துக்கு மாற்றாக தவறாக கர்ப்பிணிக்கு 'ஓ பாசிட்டிவ்' ரத்தத்தை சிதம்பரம் அரசு மருத்துவமனை ஏற்றியதால் கர்ப்பிணிப் பெண் பிரியா பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். தன்னார்வலரின் அரிய வகை ரத்த தானத்தால் பிரசவம் நடந்து தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
சிதம்பரம் வசபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டியன், ஹோட்டல் தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், பிரியா கர்ப்பமானார். அவருக்குக் கடந்த மார்ச் 5-ம் தேதி ரத்த அளவு குறைந்ததால் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது ரத்த வகை 'ஓ பாசிட்டிவ்' என்று குறிப்பிட்டவுடன் அப்பெண்ணின் சகோதரர் ரத்த தானம் செய்தார். சிறிது நேரத்தில் பிரியாவின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டு தடிப்புகள் உருவாகத் தொடங்கின. அதையடுத்து ரத்தம் செலுத்துவது நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அங்கு அவரைப் பரிசோதித்தபோது பிரியா அரிதான வகை ரத்தமான 'பாம்பே ஓ குரூப்' ரத்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதும், தவறுதலாக 'ஓ பாசிட்டிவ்' ரத்தம் செலுத்தப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்து பரிந்துரையின்படி ஜிப்மரில் கடந்த மார்ச் 12-ல் பிரியா அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை சீரானது. அதேநேரத்தில், பிரசவத்தின்போது அரிய வகை ரத்தம் தேவை என்பதால் தன்னார்வலரை நாடி தயார் செய்து கொள்ளுமாறு ஜிப்மர் தரப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பல இடங்களில் தன்னார்வலர்களைத் தேடினர். இச்சூழலில், புதுச்சேரியில் ரத்த தானம் செய்யும் 'உயிர்துளி' அமைப்பைச் சேர்ந்த பிரபுவை நாடினர். அவரும் தன்னார்வலரை ஏற்பாடு செய்து தருவதாக உறுதி தந்திருந்தார். இச்சூழலில், கடந்த மே 30-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து சிதம்பரத்திலிருந்து ஜிப்மர் அழைத்து வந்து அனுமதித்தனர்.
அரிய வகை 'பாம்பே ஓ' குரூப் ரத்த வகையைச் சேர்ந்த முதலியார்பேட்டை பூபேஷ் ராஜன் ரத்த தானம் செய்தார். அதையடுத்து பிரசவம் நடந்து ஆண் குழந்தை பிறந்தது. தாயும் நலமுடன் இருக்கிறார்.
இது தொடர்பாக பிரியாவின் கணவர் வீரபாண்டியன் கூறுகையில், "மருத்துவமனையில் ரத்த வகையைப் பரிசோதித்துச் செலுத்தாமல் நோயாளியிடம் கேட்டு அவர்கள் சொல்லும் பிரிவைச் செலுத்தும் போக்கு நீடிக்கிறது. இத்தவறான முறையால் நாங்கள் பாதிக்கப்பட்டோம். நல்லவேளையாக மனைவியும், என் குழந்தையும் உயிர் பிழைத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
ரத்த தானம் செய்த பூபேஷ் ராஜன் கூறுகையில், "நான் இத்துடன் 27-வது முறையாக ரத்த தானம் செய்துள்ளேன். இவ்வகை ரத்த வகை பற்றி பலருக்கும் தெரியவில்லை. மருத்துவமனைகளில் ஆய்வகத்தில் இவ்வகை உள்ளதா என்பதை பரிசோதிப்பது அவசியம். இவ்வகை ரத்தம் தேவை என்பதால் பல மாநிலங்களுக்குச் சென்று ரத்த தானம் செய்துள்ளேன்" என்று தெரிவித்தார்.
'உயிர்துளி' அமைப்பின் பிரபு கூறுகையில், "தங்களின் ரத்த வகை என்ன என்பதை அனைவரும் சரியாக அறிந்து வைத்துக் கொள்வது முக்கியம். குறிப்பாக, 'ஓ பாசிட்டிவ்'வில் அரிய வகை 'பாம்பே' ரகத்தில் உள்ளோர் லட்சத்தில் நான்கு பேர் இருக்கின்றனர். 'ஓ பாசிட்டிவ்'வில் உள்ளோர் தங்கள் பிரிவு என்ன என்பதைப் பரிசோதித்து அறிந்து கொள்வது அவசியம்" என்று தெரிவித்தார்.