

கரோனா தொற்று உள்ள கர்ப்பிணிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் பிரசவம் பார்க்க மறுப்பது தவறு என, சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டையில் இன்று (ஜூன் 1) சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"வயதானவர்கள், சிறுநீரகம், நுரையீரல் பிரச்சினை உள்ளவர்களையே கரோனா அதிகம் தாக்குகிறது. அதனால், வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள தெருக்களில் உள்ள இம்மாதிரியானவர்களை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றி மாத்திரைகள், சத்தான உணவுகளை அளித்து ஆரோக்கியமான சூழலில் இருக்கச் செய்து மீண்டும் அனுப்புவோம். நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க இந்த முறையைச் செயல்படுத்த ஆரம்பித்திருக்கிறோம். இதன் தாக்கம் இன்னும் 2 வாரங்களில் தெரியும்.
நோய்த்தாக்கம் அதிகம் உள்ள பகுதிகள், தெருக்களின் வெளிப்புறத்தில் கட்டுப்பாட்டு முறைகளை கடுமையாக செயல்படுத்த உள்ளோம். இதனால் அந்த நோய்த்தாக்கம் வெளிப்புறங்களில் பரவாமல் கட்டுப்படுத்தப்படும். இதனை 13-வது மண்டலத்தில் 173-வது வார்டில் முயற்சி செய்தோம். 9-வது மண்டலத்தில் 114, 115 ஆம் வார்டுகளில் முயற்சி செய்கிறோம். இந்தத் தொற்றை படிப்படியாக அறிவியல் முறைகளில்தான் கட்டுப்படுத்த முடியும்.
கரோனா தொற்று உள்ளவர்களுக்கு பிரசவம் பார்க்கக் கூடாது என தனியார் மருத்துவமனைகள் சொன்னால் அது மிகப்பெரிய தவறு. தனியார் மருத்துவமனைகளுக்கு இதுகுறித்த அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சார்பில் 3 இடங்களில் சிறப்பு பிரசவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப அதனை அதிகப்படுத்துவோம்.
சென்னையில் ஒவ்வொரு வார்டும் ஒரு மாதிரியாக இருக்கும். இதனைப் பொறுத்து நோய்த்தாக்கம் வேறுபடும். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் நோய்த்தாக்கம் அதிகம் இருக்கிறது. மார்க்கெட்டுகள் மிகப்பெரிய பிரச்சினை. வார்டு வாரியாக பல முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் நடவடிக்கை காரணமாக புதிய நோய்த்தொற்று ஏற்படுவதில்லை. தொடர்ந்து 14 நாட்கள் புதிய தொற்று இல்லை என்றால் தடை செய்யப்பட்ட பகுதிகளை விடுவித்து விடுகிறோம். 1,286 தடை செய்யப்பட்ட பகுதிகளில் 1,000க்கும் மேற்பட்ட பகுதிகளைத் தளர்த்திவிட்டோம். இது மிகப்பெரிய வெற்றி. புதிய தொற்று வருவது பெருமளவு குறைந்துவிட்டது.
புதிய உத்திகளைச் செயல்படுத்த கூடுதலாக போலீஸார் தேவைப்படுவர். அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
முழு வெற்றி மக்களின் 100% ஒத்துழைப்பால் மட்டுமே ஏற்படும். மக்களில் சிலர் முகக்கவசம் குறித்துப் பொருட்படுத்துவதில்லை. கிட்டத்தட்ட 60 லட்சம் அபராதம் இதற்கென வசூலித்திருக்கிறோம். அபராதம் வசூலிப்பது நோக்கம் இல்லை. மக்களுக்கு பய உணர்வை ஏற்படுத்துவதற்கே இதனைச் செய்கிறோம்.
மக்கள் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினை நீளும். அரசாங்கத்திற்கு செலவு ஏற்படும். மக்களின் வரிப்பணம் செலவாகும்.
சலூன்களில் பாதுகாப்பு உபகரணங்களுடனேயே பணி செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த விஷயத்தில் தயவு தாட்சண்யமே பார்க்கப் போவதில்லை. வாழ்வாதாரத்தைக் கெடுக்க வேண்டும் என்பது நோக்கமில்லை. மற்றவர்களின் உயிருடன் விளையாடக்கூடாது என்பதற்காகச் சொல்கிறேன்".
இவ்வாறு பிரகாஷ் தெரிவித்தார்.