Published : 01 Jun 2020 12:17 PM
Last Updated : 01 Jun 2020 12:17 PM

மீண்டும் இயங்கத் தொடங்கும் கோவை பேருந்து நிலையங்கள்

பேருந்துகளால் களைகட்டிய கோவை காந்திபுரம் பேருந்து நிலையம்.

தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்காலிகக் காய்கறிச் சந்தைகளாக இயங்கிவந்த கோவை பேருந்து நிலையங்கள் மீண்டும் இயங்கத் தொடங்குகின்றன. அங்கு இயங்கி வந்த காய்கறிச் சந்தைகள் பழைய இடங்களுக்கே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா ஊரடங்கு உத்தரவுக்குப் பின் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்கள் தற்காலிகக் காய்கறிச் சந்தைகளாக மாற்றப்பட்டன. இப்பகுதிகளின் சுற்றுவட்டாரத்தில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட்டுகள் யாவும் கரோனா தொற்று காரணமாகப் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று முதல் ஒவ்வொரு மண்டலத்துக்குள்ளும் புதிய ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் முதலாவது மண்டலமான கோவையில் 50 சதவீதப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் தற்காலிகமாகச் செயல்பட்டு வந்த காய்கறி, பழக் கடைகள் டாக்டர் நஞ்சப்பா சாலையிலுள்ள சிறைச்சாலை மைதானத்தில் செயல்படத் தொடங்கும். இதேபோல் உக்கடம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவந்த காய்கறிச் சந்தை, உக்கடம் லாரிப்பேட்டையில் செயல்படவுள்ளது. மேலும், மாநகரக் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி, பழக் கடைகள் வழக்கம்போல் உழவர் சந்தைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து காய்கறி வியாபாரிகள், பழைய காய்கறிச் சந்தைகளில் விற்பனை செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x