

திரைப்படங்களில் புகைப்பிடிப்பது போல் ஒரு காட்சி வந்தால் கூட, அதில் புகையிலை தீங்கு விளைவிக்கும், புற்றுநோயை உருவாக்கும் என்ற வாசகங்கள் இடம்பெறுவதை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. புகையிலைக்கு என்று தனியாக விளம்பரப்படுத்தும் நிலை தமிழகத்தில் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கோவில்பட்டியில் உள்ள பூ கட்டும் தொழிலாளர்கள், சைக்கிள் தொழிலாளர்கள் 500 பேருக்கும் அமைச்சரின் சொந்த செலவில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
அமைச்சர் கடம்பூர் ராஜூ அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், நகர அதிமுக செயலாளர் விஜயபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, திரைப்படங்களில் புகைப்பிடிப்பது போல் ஒரு காட்சி வந்தால் கூட, அதில் புகையிலை தீங்கு விளைவிக்கும், புற்றுநோயை உருவாக்கும் என்ற வாசகங்கள் இடம்பெறுவதை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. புகையிலைக்கு என்று தனியாக விளம்பரப்படுத்தும் நிலை தமிழகத்தில் இல்லை.
சின்னத்திரை படப்பிடிப்பை பொறுத்தவரை முதலில் கடுமையான விதிகள் இருந்தன. அதனை எளிமைப்படுத்தும் வகையில், ஒரு தொடருக்கு படப்பிடிப்பு நடத்த ஒருமுறை அனுமதி பெற்றால் போதும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
திரையரங்குகள், வழிபாட்டுதலங்கள், பெரிய வணிக கட்டடங்கள் உள்ளிட்டவைகளில் அதிகளவு மக்கள் கூடுவார்கள். கரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். அதனால், அது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய நேரத்தில் முடிவெடுக்கும்.
வல்லநாட்டில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் எனது துறையின் மானிய கோரிக்கையில், வெள்ளையத்தேவனுக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தேன்.
அடுத்த ஆண்டு அவரது பிறந்த நாளின் போது, முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு அரசு விழாவாக நடத்தப்படும், என்றார் அவர்.