ஆம்னி பேருந்துகளை இயக்கப்போவதில்லை: 60% பயணிகளுடன் இயக்குவது சாத்தியமில்லை: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

 ஆம்னி பேருந்துகளை இயக்கப்போவதில்லை: 60% பயணிகளுடன் இயக்குவது சாத்தியமில்லை: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
Updated on
1 min read

நாளைமுதல் தமிழகத்தில் பொதுப் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டாலும் ஆம்னி பேருந்துகளை இயக்கப்போவதில்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் பேட்டியளித்த அதன் உரிமையாளர்கள் தெரிவித்ததாவது:

5-ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுப் பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களை 8 மண்டலங்களாக பிரித்து அதில் 7 வது மண்டலமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டும், 8 வது மண்டலமாக சென்னையையும் இணைத்துள்ளது.

இந்த இரண்டு மண்டலங்கள் தவிர மீதமுள்ள 32 மாவட்டங்கள் அடங்கியுள்ள 6 மண்டலங்களில் மண்டலங்களுக்குள் பொதுப்பேருந்து போக்குவரத்து 60 சதவீத பயணிகளுடன் இயக்கலாம் என அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் 60 % பயணிகளுடன் பேருந்தை இயக்குவது சாத்தியமில்லை என தெரிவித்துள்ளது.

நாளை ஆம்னி பேருந்துகள் இயங்காது என தெரிவித்துள்ல அவர்கள், இதுவரை ரூ. 600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஊரடங்கு காலத்திற்கும் சேர்த்து முன்னரே சாலை வரி செலுத்தியுள்ளதாகவும் அதுகுறித்து அரசுகள் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளனர். ஒரு பேருந்துக்கு ரூ 1 லட்சத்து 25000 முதல் ரூ 3 லட்சம் வரை சாலை வரி மட்டும் முன் கூட்டியே கட்டப்பட்டுள்ளது. அது குறித்து பல முறை தெரிவித்தும் இதுவரை பதில் இல்லை என தெரிவித்துள்ளனர்.

2 மாதமாக நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க ஒரு பேருந்துக்கு ரூ.1 லட்சம் செலவாகும். ஆம்னி பேருந்துகள் சார்ந்து ஒரு லட்சம் தொழிலாளர்கள் கடந்த 2 மாதமாக வருமானமின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கான எந்த திட்டமும் அரசிடம் இல்லை. இவ்வாறு தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in