

நாளை முதல் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 6 மண்டலங்களிடையே பேருந்து போக்குவரத்து தொடங்குவதை அடுத்து பயணிகள் தனிமனித இடைவெளி, பாதுகாப்பு, முகக்கவசம் அணிவது, பேருந்து பராமரிப்பு, டிக்கெட் வழங்கும் முறை உள்ளிட்ட பல வழிகாட்டுதல்களை அரசு அளித்துள்ளது.
அதுகுறித்த விவரம் வருமாறு:
பணம் கையாளுவதை தவிர்க்க மாதாந்திர பாஸ் பாஸ் நடைமுறையை கொண்டுவரலாம்.
கியூ ஆர் கோட் முறையை கொண்டுவரலாம். பயணிகள் தங்கள் வாலட் மூலம் கியூ அர் கோட் மூலம் பணம் செலுத்தி அதை கண்டக்டரிடம் காண்பித்து டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம்.
மேற்கண்ட இரண்டு முறையும் இல்லாத பட்சத்தில் கண்டக்டர் பணம் வாங்கிகொண்டு டிக்கெட் கொடுக்கலாம்.
போக்குவரத்து கழகம் மாதாந்திர பாஸ் வழங்குவதை ஊக்கப்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம்.
பேருந்துகள் புறப்படும் முன்னும், டிரிப் முடியும் போதும் கிருமி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
பயணிகள் பின் பக்கமாக ஏறி முன் பக்கமாக இறங்க வேண்டும். முன்பக்க, பின் பக்க வழியில் கிருமி நாசினி பாட்டில் கட்டாயம் வைக்க வேண்டும்.
இருக்கைகளில் இடதுபுறம் காலியாக இருப்பதை உறுதி செய்யவேண்டும்.
ஏசி பேருந்துகளில் ஏசி போடக்கூடாது. ஜன்னல்கள் திறந்து காற்றோட்டத்தை உறுதி செய்யவேண்டும்.
ஓட்டுநர் நடத்துனர் இருவரும் முகக்கவசம், கையுறை அணிய வேண்டும். பயணிகள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு கிருமி நாசினி கொடுத்து பின்னர் அனுமதிக்க வேண்டும்.
தினமும் ஓட்டுநர் நடத்துனருக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்படவேண்டும்.
பயணிகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் அறிகுறி இருந்தால் பேருந்தில் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும்.
பேருந்து நிலையத்தை ஒரு நாளைக்கு 2 முறை சுத்தப்படுத்த வேண்டும்.
செக்கிங்க் இன்ஸ்பெக்டர்கள் பயணிகளின் சமூக இடைவெளி, பேருந்தில் கூடுதல் எண்ணிக்கையில் பயணிகள் ஏறாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு பேருந்துகளுக்கான வழிகாட்டுதலை அரசு அறிவித்துள்ளது.