

கரோனா ஊரடங்கையொட்டி 67 நாட்களுக்குப் பின், குறிப்பிட்ட ரயில்களை நாளை ( ஜூன்1) இயக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் சென்னையைத் தவிர, பிற மாவட்டங்களை இணைக்கும் வகையில் மதுரை உட்பட குறிப்பிட்ட மாவட்டத்தில் இருந்து சில சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இது தொடர்பாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் சில வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி, மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடத்திற்கு முன்பாக ரயில் நிலையத்திற்கு வர வேண்டும். அனைத்து பயணிகளும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, ரயில் நிலையத்திற்குள் அனுப்பப்படுவர்.
கரோனா அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர். ரயில் பெட்டிகளில் உள்ளே நுழையும் போதும், பயணம் செய்யும்போதும் கண்டிப்பாக சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும்.
ரயில் நிலையத்திற்கு வரும் போதும், பயணம் செய்யும்போதும் பயணிகள் அவசியம் முகக் கவசம் அணிந்து இருக்கவேண்டும். பயணச்சீட்டுள்ள பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
பயணச் சீட்டு அடிப்படையிலேயே பயணிகளும் அவர்கள் வரும் வாகனங்களும் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படும்.
சென்று சேரும் ரயில் நிலையத்தில் அரசு வரையறுத்துள்ள சுகாதார விதிகளைக் கடைபிடிக்க வேண்டும். நோய்த் தொற்று தவிர்க்க, பயணிகள் உணவு தின்பண்டங்களை தாங்களே வீட்டிலிருந்து கொண்டு வரவேண்டும்.
இது போன்ற விதிமுறை, அறிவுரைகளை பயணிகள் பின்பற்றி ஒத்துழைக்கவேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.