புதுச்சேரியில் அதிகரிக்கும் கரோனா தொற்று -கிருமிநாசினி இல்லாத கடைகள்- முகக்கவசம் இல்லாத மார்க்கெட்டுகள்- கண்டுகொள்ளாத அதிகாரிகள்

புதுச்சேரியில் அதிகரிக்கும் கரோனா தொற்று -கிருமிநாசினி இல்லாத கடைகள்- முகக்கவசம் இல்லாத மார்க்கெட்டுகள்- கண்டுகொள்ளாத அதிகாரிகள்
Updated on
1 min read

புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் கடைகளில் கிருமி நாசினி வைக்கும் பழக்கம் மறைந்து வருகிறது.

முகக்கவசம் இல்லாமல் மார்க்கெட்டுகளில் விற்பனையாளர்கள் பணிபுரிகின்றனர். முக கவசம் அணியாமல் வாகனங்களில் செல்லும் போக்கு அதிகரித்துள்ளது. இதை அதிகாரிகள் கண்டுகொண்டு நடவடிக்கை எடுப்பதையும் குறைத்து விட்டனர்.

புதுச்சேரியில் தற்போது கரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் மொத்தம் இதுவரை 70 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். மீதியுள்ளவர்களில் 36 பேர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 பேர் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் சேலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தற்போது ஊரடங்கு தளர்வு அதிகரித்து மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. தொடக்கத்தில் பல கடைகளில் கிருமி நாசினி வைக்கும் பழக்கம் கட்டாயமாக இருந்தது. தற்போது பல கடைகளிலும், வங்கிகளிலும், ஏடிஎம்களில் கிருமி நாசினியே இல்லை.
அதேபோல் புதுச்சேரியில் பழைய பஸ் நிலைய உழவர் சந்தை, இசிஆர் மீன் மார்க்கெட் வளாக காய்கறி சந்தை மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள காய்கறி சந்தை என பல இடங்களிலும் தற்போது விற்பனையாளர்கள் முககவசம் அணியும் பழக்கத்தையே விட்டு விட்டனர். சாலைகளிலும் முககவசம் இல்லாமல் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

புதுச்சேரி வங்கி செல்லும் மக்கள் கூறுகையில், "புதுச்சேரியில் முக்கிய வங்கி கிளைகள் பலவற்றிலும் கிருமி நாசினியே இல்லை. அத்துடன் ஏடிஎம்களில் தூய்மை பணியும் நடப்பதில்லை. தூய்மையாக இல்லை. அதிகாரிகள் முக்கியமான இவ்விஷயத்தில் ஆய்வு செய்து கரோனா கட்டுப்பாட்டில் செயல்படாத வங்கியாளர்கள், கடைகள், சந்தை பகுதியில் உள்ளோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் செய்வது போல் இங்கும் செய்வது அவசியம்" என்கின்றனர்.
எல்லைகளில் சோதனை சரியில்லை- முன்னாள் எம்பி புகார்

புதுச்சேரி முன்னாள் எம்பியும் பேராசிரியருமான ராமதாஸ் கூறுகையில், "நான்காவது ஊரடங்கு மே 18ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் கொடுத்த பிறகு பாதிப்புகள் 70 ஆக, அதாவது சுமார் 14 மடங்காக உயர்ந்துள்ளது. இது ஒரு சாதாரண சூழ்நிலை. புதுச்சேரியின் எல்லைகளில் சரியான பரிசோதனை செய்யாமல் நுழையவிட்டது நோய் அதிகரிப்புக்கு முதல் காரணம்.

எல்லா எல்லைகளிலும் வெளிநாட்டில் இருந்தும், வேறு மாநிலங்களில் இருந்தும் ஊர்களில் இருந்தும் யூனியன் பிரதேசத்திற்கு வருபவர்களை பரிசோதிக்கும் ஏற்பாடு பலப்படுத்தப்பட வேண்டும்.

அதிக அளவில் பரிசோதனைகள் செய்வதற்கு பரிசோதனை கூடங்களின் எண்ணிக்கையை உயர்த்தவேண்டும். அரசு உடனடியாக 100 மருத்துவர்களையும் 100 செவிலியர்களையும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in