Last Updated : 31 May, 2020 05:13 PM

 

Published : 31 May 2020 05:13 PM
Last Updated : 31 May 2020 05:13 PM

60 சதவீத இருக்கைக்கான பயணிகளைக் கொண்டு தனியார் பேருந்துகளை இயக்க முடியாது: உரிமையாளர் சங்கத்தினர் திட்டவட்டம்

 கோவை

60 சதவீத இருக்கைக்கான பயணிகளைக் கொண்டு தனியார் பேருந்துகளை இயக்க முடியாது என உரிமையாளர் சங்கத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட மார்ச் 25-ம் தேதி முதல் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மண்டலங்களில் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகள் (Stage Carriers) இயக்க அனுமதிக்கப்படுவதாகவும், அரசால் வெளியிடப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகளை இயக்குவது கடினம் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு பேருந்து உரிமையாளர் சங்கங்களின் சம்மேள செயலர் தர்மராஜ் கூறியதாவது:

60 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இதன்படி, பேருந்துகளை இயக்கினால் நஷ்டமே ஏற்படும். பேருந்து வசதி குறைவான கிராமப்புற பகுதி மக்களுக்கும் இது சிரமத்தை ஏற்படுத்தும். அரசு தரப்பில் வேண்டுமானால் 50 சதவீத பேருந்துகளை இயக்கலாம். தனியார் பேருந்துகளில் எந்த 50 சதவீத பேருந்துகளை இயக்குவது என்ற குழப்பம் நீடிக்கிறது. இல்லையெனில், ஒரே வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளை ஒருநாள் விட்டு ஒருநாள் இயக்க வேண்டியிருக்கும். மேலும், குறிப்பிட்ட மண்டலத்துக்குள் மட்டுமே பேருந்துகளை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாகவும் பல நெடுந்தூர பேருந்துகளை இயக்க முடியாது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பேருந்துகளை இயக்காததால், பேருந்துகள் ஓடாத நாட்களை கருத்தில் கொண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான காலாண்டு வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். பேருந்துகளை இயக்காத நாட்களை கணக்கிட்டு, காப்பீட்டு காலத்தை நீட்டித்து தர வேண்டும் என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடமும் (ஐஆர்டிஏ) வேண்டுகோள் விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

வருவாய் இழப்பு

கோவை மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் (தெற்கு) தலைவர் வி.துரைக்கண்ணன் கூறும்போது, “விதிமுறைகளை முழுமையாக தளர்த்தாதவரை நாங்கள் பேருந்துகளை இயக்குவது கடினம். அப்படி இயக்கினால் இழப்பை சமாளிக்க முடியாது. 2 மாதங்களாக பேருந்துகளை இயக்காததால் ஏற்கெனவே வருவாய் இழந்துள்ளோம். மேலும், எங்கள் ஊழியர்களுக்கு பாதி சம்பளம் அளித்து வருகிறோம். அரசு எங்களுக்கு ஏதேனும் சலுகை அல்லது நிவாரணம் அளித்தால் மட்டுமே பேருந்துகளை இயக்க முடியும். இல்லையெனில், தற்காலிகமாக பேருந்து கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x