

‘கரோனா’ ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோமாரி நோய் தடுப்பூசி முகாம், தமிழகம் முழுவதும் நாளை 1-ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது.
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதலாவது சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி முகாம் நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ம் தேதி முதல் தொடங்கி நடை பெற்று வந்தது.
கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டால் இந்த தடுப்பூசி முகாம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து இந்த திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடும் பணி நாளை 1-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. ம
மதுரை மாவட்டத்தில் மதுரை மண்டல இணை இயக்குநர் தா. சுரேஷ் கிறிஸ்டோபர் தலைமையில் மாடுகளுக்கு தடுப்பூசி போடும் பணியில் கால்நடை மருத்துவர்கள், ஆய்வாளர்கள், உதவியாளர்கள் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து கால்நடை துறை இணை இயக்குனர் தா.சுரேஷ் கிறிஸ்டோபர் கூறுகையில், ‘‘அனைத்து மாடுகளுக்கும் காதுவில்லை எண் (ஜ.என்.ஏ.பி.எச்) அனிவிப்பது மத்திய கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த காதுவில்லை எண் கால்நடை பெருக்கம் மற்றும் நலப்பணிகள் தகவல் தொகுப்பால் தொகுக்கப்படஉள்ளது. கால்நடைகளை அடையாளப்படுத்துவதன் மூலம் நலத்திட்ட உதவிகளுக்கான பயனாளிகளை அடையாளம் காணவும், பயன்கள் உரிய நபர்களுக்கு நேரடி மாற்றம் செய்திடவும் இயலும்.
தற்போது தடுப்பூசி போடுவதற்கு இந்த காதுவில்லை அணியும் திட்டம் மிகவும் உதவிகரமாக உள்ளது. தடுப்பூசிக்காக கால்நடைகளை கொண்டு வரும் பயனாளிகள், முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியினை கடைபிடித்து தங்கள் பகுதிக்கு நேரடியாக வந்து களப்பணியாற்றும் கால்நடை மருத்துவக் குழுவினருக்கு ஒத்துழைக்க வேண்டும், ’’ என்றார்.