

சென்னை டிஜிபி அலுவலக பெண் ஊழியர் ஒருவர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முத்தலகுறிச்சியில் உள்ள சொந்த ஊர் வந்தபோது அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 14,682 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவற்றில் தற்போது உள்ளூரில் வசிக்கும் நபர்களுக்கு கரோனா இல்லை என்றாலும், சென்னை, மும்பை உட்பட வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71 பேராக உயர்ந்துள்ள நிலையில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட வெளியூர்களில் இருந்து வந்த 39 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றிய குமரி மாவட்டம் குமாரபுரத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் சொந்த ஊருக்கு வந்தபோது ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முத்தலகுறிச்சியைச் சேர்ந்த, சென்னை டிஜிபி அலுவலக பெண் ஊழியர் சொந்த ஊர் வந்தபோது கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.