

தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்பு திட்டமான வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகளை மீண்டும் தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் வீணாக கலக்கும் 13, 758 மில்லியன் கன அடி நீரில் ஒரு பகுதியான 2, 765 மில்லியன் கனஅடி வெள்ள நீரை, தாமிரபரணி ஆற்றின் 3-வது அணைக்கட்டான கன்னடியன் அணைக்கட்டில் இருந்து ஒரு வெள்ள நீர் கால்வாய் அமைத்து கருமேனியாறு மற்றும் நம்பியாற்றுடன் இணைத்து திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆகிய வறட்சிப் பகுதிகளுக்கு கொண்டு இத் திட்டத்தால்
திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி மற்றும் ராதாபுரம் ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளுக்குட்பட்ட 33298.07 ஏக்கரும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட 23610.73 ஏக்கர் நிலங்களும் பாசன வசதிபெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்களும் என மொத்தம் 50 கிராமங்கள் பயன்பெறும். இம்மாவட்டங்களில் மொத்தம் 252 குளங்கள், 5220 கிணறுகள் பயன் பெறுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இத்திட்டமானது 4 நிலைகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் இரு நிலைகளிலும் கால்வாய் வெட்டும் பணிகள் 96 சதவீதம் முடிவடைந்துள்ளது. 3-ம் நிலையில் 62 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. 4-ம் நிலைக்கான பணிகளுக்கு நிர்வாக ஒப்புதல் கடந்த 23-ம் தேதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக இப்பணிகள் முடங்கியிருந்தன. இப்பணிகளை மீண்டும் தொடங்கி விரைவுபடுத்தும் வகையில் கால்வாய் பகுதிகளை மதுரை மண்டல தலைமை பொறியாளர் கிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. ஊரடங்கு காரணமாக பணிகள் நடைபெறவில்லை.
தொடர்ந்து கால்வாய் வெட்டும் பணிகளை மேற்கொண்டு வடகிழக்கு பருவமழை காலத்துக்கு முன்னதாக முழுமையாக முடிக்க அதிகாரிகளுக்கு தலைமை பொறியாளர் உத்தரவிட்டார். 4-ம் நிலையிலுள்ள பணிகளை அடுத்த மாதம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.