

விவசாயக் கடன்களுக்கு வட்டி தள்ளுபடி அறிவித்து விட்டு, தற்போது வட்டி வசூல் செய்ய அரசாணை வெளியிட்டுள்ளது கண்டனத்துக்கு உரியது என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
இன்று திருத்துறைப்பூண்டி அருகே ஆண்டாங்கரை, ஆலிவலம், பொன்னீரை பகுதிகளில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில் அரிச்சந்திரா நதியில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட்ட பின் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"மத்திய - மாநில அரசுகள் கரோனா அழிவிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க எந்தவொரு நிவாரண திட்டங்களும் அறிவிக்கவில்லை. கடன் தவணை திரும்ப செலுத்த கால நீட்டிப்பு வழங்குவதாகவும், வட்டி முழுவதும் தள்ளுப்படி செய்யப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்தார். ஆனால், அறிவிப்பு குறித்தான எழுத்துபூர்வ அரசாணையில், வட்டி கணக்கிட்டு வசூல் செய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு, கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட வட்டியில்லா கடனுக்கு வட்டி கணக்கிட வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பி விவசாயிகளை வஞ்சிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் மத்திய - மாநில அரசுகளின் மோசடி நடவடிக்கை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விவசாயிகள் நலன் கருதி கடன், வட்டி முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு குறுவை சாகுபடியை ஊக்கப்படுத்த குறுவை தொகுப்பு திட்டம் கேட்டோம். அதையும் முதலமைச்சர் வழங்க மறுத்துள்ளது வேதனையளிக்கிறது. உடன் வழங்க முன் வரவேண்டும்.
ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தில் 2013-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 30 சதவீத பணிகள் முடங்கி உள்ளது. இதனை துரிதப்படுத்தி முடிக்க கால நிர்ணயம் செய்திட வேண்டும். மேலும், பேரழிவை ஏற்படுத்தும் வெட்டுக்கிளி தாக்குதலை துவக்கத்திலேயே தடுத்து நிறுத்த மத்திய அரசு தவறிவிட்டது. இதனால் இந்திய விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது.
போர்க்கால அடிப்படையில் விமானப்படையைப் பயன்படுத்தி இயற்கையான பூச்சிக்கொல்லி மருந்துகளை வான் வழியாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் அனைத்திலும் ஒரே நேரத்தில் தெளிப்பதின் மூலம் அதனை முழுமையாக அழிப்பதற்கு முன் வரவேண்டும்.
இலவச மின்சாரம் வழங்குவது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னுக்கு பின் முரணாக பேசிவருவது கண்டிக்கதக்கது. தமிழக அரசு இலவசமாக மின்சாரத்தை வழங்குவதற்கான செலவினத்தை தானே ஏற்றுக் கொண்டுள்ளபோதும் விளக்கம் என்ற பேரில் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டுமென நெருக்கடி கொடுத்து திட்டமிட்டு தமிழக விவசாயிகளை அழிக்கத் துடிக்கிறது. இதனை அனுமதிக்க மாட்டோம். விவசாயிகள் உயிரைக் கொடுத்தாவது உரிமையை மீட்போம்" இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.