மதுரையிலிருந்து 5 மாவட்டங்களுக்கு நாளை முதல் பேருந்து இயக்கம்: அனைத்து பணியாளர்களும் பணிக்கு வர உத்தரவு

மதுரையிலிருந்து 5 மாவட்டங்களுக்கு நாளை முதல் பேருந்து இயக்கம்: அனைத்து பணியாளர்களும் பணிக்கு வர உத்தரவு
Updated on
1 min read

மதுரையிலிருந்து 5 மாவட்டங்களுக்கு 2 மாதங்களுக்கு பிறகு நாளை முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் மார்ச் 26-ம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில், நாளை முதல் பேருந்து போக்குவரத்து தொடங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மதுரை அரசு போக்குவரத்து கழக கோட்டத்திலிருந்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும் தற்போது மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு இடையே மட்டுமே பேருந்து இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மண்டலத்தில் மதுரையிலிருந்து திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.

மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் ஆயிரம் பஸ்கள் உள்ளன. இதில் சுமார் 500 பஸ்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது. மே 18-க்கு பிறகு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்பு இருப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டதால் 40 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் இயக்குவதற்கு தயார்படுத்தப்பட்டது.

இது குறித்து மதுரை கோட்ட அரசு போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் முருகேசன் கூறுகையில், "நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் அனைத்து ஓட்டுனர், நடத்துனர்கள் பணிக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓட்டுனர், நடத்துனர்களுக்கு கையுறை, முகக்கவசம், கிருமிநாசினி ஆகியன கொடுக்கப்படும், பேருந்துகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்படும்.

பேருந்துகளில் 60 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும். 40 இருக்கைகளில் 26 பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும்.

அனைத்து பயணிகளும் கட்டாயம் முகgகவசம் அணிந்திருக்க வேண்டும். பயணிகளை நின்று கொண்டு பயணிக்கு அனுமதிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in