மதுரை அருகே கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நாடோடி மக்களுக்கு உதவிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

மதுரை அருகே கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நாடோடி மக்களுக்கு உதவிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
Updated on
1 min read

மதுரை அருகே கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நாடோடி இன மக்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உணவுப் பொருள் தொகுப்பு வழங்கி உதவி செய்தனர்.

மதுரை சக்கிமங்கலத்தில் பூம்பூம் மாட்டுக்காரர்கள், ஜோதிடம் பார்ப்பவர்கள், சாம்பிராணி புகை போடுபவர்கள், சாமி வேடம் அணிபவர்கள், ஊசி, பாசி, கயிறு விற்கும் நரிக்குறவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.

இவர்கள் ஊர் ஊராகச் சென்று தொழில் செய்வது வழக்கம். கரோனா ஊரடங்கால் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

இவர்களின் குழந்தைகள் பெரும்பாலானோர் சக்கிமங்கலம் லட்சுமி காந்தன் பாரதி நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வி பயில்கின்றனர்.

தங்கள் மாணவர்களின் பெற்றோர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதை பார்த்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் நாடோடி இன மக்களுக்கு உதவ முன்வந்தனர்.

இதையடுத்து பள்ளி ஆசிரியர்களும், சென்ட்ரல் ரோட்டரி கிளப் நிர்வாகிகளும் இணைந்து 170 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்தும் வழங்கினர்.

இந்த நிகழ்வுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பா.அல்லிமுத்து தலைமை வகித்தார். சக்கிமங்கலம் ஊராட்சித் தலைவர் நாகலெட்சுமி காசிராஜன் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் ஆர்.வெங்கடேசன், செயலர் ஹரிஹரசுதன், நிர்வாகிகள் அசோக்குமார், ஈசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக ஆசிரியை எம்.அகிலா வரவேற்றார். முடிவில் பட்டதாரி ஆசிரியர் டி.யூ.ராஜவடிவேல் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in