பன்னாட்டு விமானங்களை அனுமதிக்க  தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்:  வெளியுறவுத்துறை அமைச்சருக்கு வைகோ கடிதம்

பன்னாட்டு விமானங்களை அனுமதிக்க  தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்:  வெளியுறவுத்துறை அமைச்சருக்கு வைகோ கடிதம்
Updated on
1 min read

அயல்நாடுகளில் சிக்கி இருக்கின்ற தமிழர்களை அழைத்து வர பன்னாட்டுவிமானங்களை தமிழகத்தில் பறக்க அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதி உள்ளார்.

அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:

“அயல்நாடுகளில் சிக்கி இருக்கின்ற இந்தியர்களை அழைத்து வருவதற்காக, வந்தே பாரத் திட்டத்தை, நடுவண் அரசு அறிவித்துச் செயல்படுத்தி வருகின்றது. கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தோர், வேலை வாய்ப்பு இழந்தவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடித்தவர்கள், நாடு திரும்புவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

அதன்படி, 50000 க்கும் மேற்பட்டவர்கள் நாடு திரும்பி விட்டனர். ஆனால், தமிழ்நாட்டுக்கு ஓரிரு விமானங்கள் மட்டுமே வந்தன. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அயல்நாடுகளில் சிக்கி இருக்கின்றனர். உணவு, இருப்பிடம், உரிய மருத்துவ வசதிகள் இன்றித் தவித்து வருகின்றனர்.

தங்கி இருக்கின்ற இடத்திற்கு வாடகை கொடுக்க முடியவில்லை. குறிப்பாக, வளைகுடா நாடுகளில் உள்ள தமிழகத் தொழிலாளர்களின் நிலை பரிதாபகரமாக உள்ளது. அவர்கள் வடிக்கின்ற கண்ணீரை, மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள விமானங்களின் பட்டியலிலும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றது.

இது தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி ஆகும். பன்னாட்டு விமானங்கள் பறக்க தமிழக அரசு அனுமதி மறுத்து வருகின்றது. எனவே, தாங்கள் இந்தப் பிரச்சினையில் உடனடி கவனம் செலுத்தி, தமிழக அரசை வலியுறுத்தி, தமிழ்நாட்டுத் தொழிலாளர்களை விரைவில் அழைத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பன்னாட்டு விமானங்கள் பறக்க அறிவிப்பு வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்”.

இவ்வாறு அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in