

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாள்தோறும் சூரியநமஸ்காரம் செய்யக்கோரி 108 முறை செய்முறை விளக்கமளித்து தந்தையும், மகளும் பொதுமக்கள் கூடும் இடத்தில் விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினர்.
புதுச்சேரி எல்லைபிள்ளைச்சாவடி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் மற்றும் அவரது 9 வயது மகள் சஸ்மிதா ஆகியோர் பழைய பஸ் நிலையம் உழவர் சந்தை அருகே இன்று காலை சூரிய நமஸ்காரம் செய்ய தொடங்கினர். 45 நிமிடங்களில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்தனர். அவ்வழியாக சென்றோர், காய்கறி வாங்க வந்த பலரும் இந்நிகழ்வை பார்த்தனர்.
45 நிமிடங்களுக்கு பிறகு ராஜசேகரும், சஸ்மிதாவும் கூறுகையில்," கரோனா காலம் இது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வது அவசியம். தற்போது நடைபயிற்சியோ, உடற்பயிற்சி நிலையத்துக்கோ செல்ல இயலாது. வீட்டிலேயே நாம் நம் நோய் எதிர்ப்பு சக்தியை பாரம்பரிய முறையில் அதிகரிக்க இயலும். அதற்கு சூரிய நமஸ்காரம் பயிற்சி செய்வது சிறந்த பலன் தரும். அதை மக்களிடத்தில் கொண்டு செல்லவே இம்முயற்சி எடுத்தோம்.
அத்துடன், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் பணியினை பாராட்டும் வகையில் இந்நிகழ்வை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்" என்று குறிப்பிட்டனர்.