

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள்50 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் பல்வேறு இடங்களில் தங்கிவேலை செய்து வந்தனர். கடந்தமார்ச் 23-ம் தேதி மேற்கு வங்கத்திலிருந்து இளம் தம்பதியர் தங்கள்நண்பர்கள் மூலம் சென்னை வந்தனர். சேலையூர் அருகே மப்பேடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடியேறினர்.
குடியேறிய மறுநாளே ஊரடங்கு தொடங்கியது அதன் பிறகு புறநகர் பகுதியில் வேலை வாய்ப்புகளை இழந்த வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். இவர்களும் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
நேற்று வெளியில் நடமாடிக் கொண்டிருந்த இளம் தம்பதியர் அதன் பிறகு வீட்டுக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் வெளியில் வரவில்லை. வெகு நேரம்ஆகியும் வராததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது வீட்டில் அவர்கள் ஒரே புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
இறந்த தம்பதியரின் பெயர் விவரங்கள் தெரியாததால் அந்த பகுதியில் இருக்கும் மேற்குவங்க தொழிலாளர்களிடம் சேலையூர் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். பெயர் விவரம் தெரிந்த பிறகு மற்ற தகவல் கிடைக்கும் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.