Published : 31 May 2020 06:39 AM
Last Updated : 31 May 2020 06:39 AM

வழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது

சென்னை

தமிழகத்தில் சாலை விபத்துகள், உடல்நலக் குறைவு, குற்றச் செயல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் வழக்கமான நாட்களில் ஆண்டு முழுவதும் நடைபெறும் உயிரிழப்புகளை ஒப்பிடும்போது, ஊரடங்கு அமலில் இருந்த ஏப்ரல் மாதத்தில் பெருமளவில் உயிரிழப்புகள் குறைந்துள்ளது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளன.

சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய கரோனா வைரஸ் மார்ச் 7-ம் தேதி தமிழகத்துக்குள்ளும் நுழைந்தது. கரோனாவால் உயிரிழப்பு ஏற்படும் அல்லது கடும் சுவாசபாதிப்புக்கு உள்ளாகி மீள்வர் என்ற மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டது. ஆனால் உண்மை நிலைவேறாக இருந்தது. தொற்று ஏற்பட்டவர்களில் 98 சதவீதம் பேருக்கு, அறிகுறியே தென்படவில்லை.

நீரிழிவு, ரத்த அழுத்தம், சுவாசப் பிரச்சினை மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ள 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மே 29-ம் தேதி நிலவரப்படி சென்னையில் 109 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 154 பேர் மட்டுமே கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக பொதுமக்களுக்கு கரோனா மீது இருந்த அச்சம் விலகி வருகிறது.

கரோனாவால் பெரிய அளவில் உயிரிழப்பு இல்லாத நிலையில், கரோனா தொற்று பரவலை தடுக்க அமலில் இருந்து வரும் ஊரடங்கால் தமிழக அளவில் உயிரிழப்புகள் குறைந்திருப்பது, சுகாதாரத் துறை புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது. அதில்கடந்த நவம்பர் முதல் பிப்ரவரிமாதம் வரையிலான காலகட்டத்தில்ஒவ்வொரு மாதமும் சராசரியாக 57,121 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் 29,542 (54 சதவீதம்) உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. 48 சதவீதம் உயிரிழப்பு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் (2019) மாதத்தில் 47,170 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனுடன் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட உயிரிழப்பை ஒப்பிடும்போது 17,628 (37 சதவீதம்) ஆக குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான 4மாதங்களில் சராசரியாக 5,935 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்தஏப்ரல் மாதம் 1,442 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விரு மாத இறப்புகளை ஒப்பிடும்போது கடந்த ஏப்ரலில் 76 சதவீத உயிரிழப்பு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாத உயிரிழப்புடன் ஒப்பிடும்போது 74 சதவீதம் குறைந்துள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் கே.குழந்தைசாமி கூறியதாவது:

ஊரடங்கால் வாகன விபத்து, கட்டுமான விபத்துகள் அறவே இல்லை. இவ்விரு துறைகளில் தான் விபத்து அதிகம் ஏற்படும். ஊரடங்கு காலத்தில் ஊரகப் பகுதிகளைவிட நகர்ப்புறங்களில் இறப்புகுறைந்துள்ளது. பெருநகரங்களுக்கு சிகிச்சைக்காக வருவோர் சிகிச்சை பலனின்றி இறப்பது உண்டு. ஊரடங்கால் நகர்ப்புறங்களுக்கு வந்து சிகிச்சை பெறுவது குறைந்ததால், அந்த இறப்புகள் ஊரகப் பகுதிகளில் பதிவாகியுள்ளன. மேலும் மன அழுத்தம் காரணமாக மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களால் உயிரிழப்பது குறைந்துள்ளது. இதன் காரணமாகவே சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x