Published : 30 May 2020 08:18 PM
Last Updated : 30 May 2020 08:18 PM

மதுரை ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு மையம் திறப்பு

மதுரை

மதுரை ரயில் நிலையத்தில், ஜூன் 1-ம் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு மையம் இன்று திறக்கப்பட்டன. இதில் முன்பதிவு செய்வதற்கு பயணிகள் வரிசையில் காத்திருந்தனர்.

டிக்கெட் முன்பதிவு செய்ய வந்தவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதும், சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதும் உறுதி செய்யப்பட்டது. மேலும், ரயில்வே நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் கிருமிநாசினி வழங்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தற்போது ஜூன் 1-ம்தேதி முதல் தமிழகத்தில் ரயில் போக்குவரத்தை துவக்குவதற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி மதுரை-விழுப்புரம், திருச்சி- நாகர்கோவில், காட்பாடி-கோயம்புத்தூர், கோயம்புத்தூர்-மயிலாடுதுறை மார்க்கங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.

அதில், வண்டி எண் 02636 மதுரை-விழுப்புரம் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.05 மணிக்கு விழுப்புரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் வண்டி எண் 02635 விழுப்புரம் - மதுரை சிறப்பு ரயில் விழுப்புரத்திலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 09.20 மணிக்கு மதுரை வந்து சேரும்.

இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, அரியலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 4 குளிர்சாதன வசதி இருக்கை பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மின்மோட்டார் பெட்டிகள் இணைக்கப்படும்.

வண்டி எண் 02627 திருச்சி - நாகர்கோவில் சிறப்பு ரயில் திருச்சியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பின்பு மதுரையிலிருந்து காலை 08.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.00 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 02628 நாகர்கோவில் - திருச்சி சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு பின்பு மதுரையிலிருந்து இரவு 07.25 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு திருச்சி சென்று சேரும்.

இந்த ரயில்கள் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் ஒரு குளிர்சாதன இருக்கை வசதி பெட்டி, 8 இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள், 8 பொது பெட்டிகள், 2 சரக்கு மற்றும் இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் இணைக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x