

திருப்புவனம் பேரூராட்சியில் டெண்டர் வைக்காமலேயே ரூ.2 கோடிக்கு பணிகள் நடந்துள்ளதாக திமுக சட்டப்பாதுகாப்பு குழு புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக சட்டப்பாதுகாப்பு மண்டலக்குழு உறுப்பினர் ஆதி.அழகர்சாமி தலைமையிலான வழக்கறிஞர்கள் சிவகங்கை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜாவிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில், திருப்புவனத்தில் புல எண் 16/14 என்ற இடத்தில் கருங்கல் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு டெண்டர் விடவில்லை. அதே இடத்தில் மைய மண்டபமும் அமைக்கப்படுகிறது. இதற்கும் டெண்டர் விடவில்லை.
திருப்புவனம் ஊத்துக் கால்வாய் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை பேரூராட்சி நிர்வாகம் தூர்வாரி வருகிறது. தண்ணீர் தேவைக்காக பேரூராட்சியில் 10 இடங்களில் ஆழ்த்துளை கிணறுகள் அமைத்துள்ளனர்.
இந்தப் பணி தரமின்றி நடந்துள்ளது. ரசீது முறையில் ரூ.10 ஆயிரத்திற்குள் மட்டுமே பணம் எடுக்க முடியும். ஆனால் மொத்தம் ரூ.2 கோடி மதிப்பிலான பணிகளை டெண்டர் விடாமல் ரசீது முறையிலேயே மேற்கொண்டுள்ளனர்.
டெண்டர் விடாமல் பணம் எடுப்பது சட்ட விதிகளுக்கு முரணானது. மேலும் வாரச்சந்தைக்காக குத்தகைஎடுத்த இடத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடக்கிறது.
இது உள்ளாட்சி விதிகளுக்கு முரணானது. இதன்மூலம் மக்கள் பணத்தை விரையமாக்கி முறைகேடு நடைபெறுகிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திமுக வழக்கறிஞர்கள் குழு உறுப்பினர்கள் பாஸ்கர், கதிர்காமன், செந்தில், கார்த்திக் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
இதுகுறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜாவிடம் கேட்டபோது, ‘‘ புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்று கூறினார்.