குமரிக்கு வெளியிடங்களில் இருந்து இ-பாஸ் இன்றி வருவோர் பயன்படுத்தும் 4 குறுக்கு சாலைகளுக்கு சீல் வைப்பு

குமரிக்கு வெளியிடங்களில் இருந்து இ-பாஸ் இன்றி வருவோர் பயன்படுத்தும் 4 குறுக்கு சாலைகளுக்கு சீல் வைப்பு
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் சென்னை, மும்பை உட்பட வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர்.

ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பி நிலைமை சரியானது செல்லலாம் என்ற நோக்குடன் அதிகமானோர் வருகின்றனர். முறையாக அனுமதி பெற்று இ பாஸுடன் வருவோரை ஆரல்வாய்மொழி, மற்றும் களியக்காவிளை சோதனை சாவடி வழியாக சுகாதாரத்துறை, மற்றும் போலீஸார் அனுமதித்து வருகின்றனர். இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.

குமரியில் கரோனா கட்டுக்குள் இருந்தாலும் வெளியூர்களில் இருந்து வருவோரால் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் 40 பேருமே வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

கடந்த சில நாட்களாக திருநெல்வேலி வழித்தடத்தில் சோதனை சாவடிகள் வழியாக வராமல், உரிய அனுமதி பெறாமல் இ பாஸ் இன்றி நூற்றுக்கணக்கானோர் அஞ்சுகிராமம், லீபுரம் பகுதி வழியாக குறுக்கு சாலைகளை பயன்படுத்தி வந்துள்ளனர். இவர்களில் பலருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து குமரியில் அனுமதியின்றி குறுக்கு சாலை வழியாக வெளியிடங்களில் இருந்து நுழைவோரை தடுக்கும் வகையில் குமரி மாவட்ட ஆட்சியர பிரசாந்த் மு.வடநேரே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், டி.எஸ்.பி. கணேசன், மற்றும் அதிகாரிகள் குறுக்கு சாலைகளை ஆய்வு செய்தனர். மேலும் அஞ்சுகிராமத்தை அடுத்த கைலாசபுரம், பரப்புவிளை, வடக்கு பகவதியப்பபுரம், பிச்சைகுடியிருப்பு ஆகிய இடங்களில் 4 குறுக்கு சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் இரவு, பகலாக போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in