

மதுரையின் மிகப்பெரிய காய்கனிச் சந்தையான பரவை மார்க்கெட்டில் கூட்ட நெரிசல் மற்றும் கரோனா தொற்றைத் தடுப்பதற்காக அதன் ஒரு பகுதி மதுரை பாத்திமா கல்லூரி மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு வரும் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் கபசுரக் குடிநீர் வழங்கும் முகாம், பாத்திமா கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்றது.
இந்தப் பணியை கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி ஜி.செலின் சகாய மேரி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் பங்கேற்று அனைத்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசங்களை இலவசமாக வழங்கினார்கள்.
கூடவே, பொதுமக்களும் வியாபாரிகளும் தனி மனித இடைவெளியுடன், முறையாக முகக்கவசம் அணிந்து காய்கனிகளை விற்கவும், வாங்கவும் அந்த மாணவிகள் அறிவுறுத்தினர். 28-ம் தேதி தொடங்கிய இந்தப் பணி இன்று நிறைவுக்கு வந்தது.
இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மு.ராகம், திட்ட அலுவலர்கள் கார்த்திகா, அன்புராணி, மெக்டலின், சகுந்தலா, ஷ்யாமளா, ரேணுகா, கயல் அந்தோணி ஆகியோர் செய்திருந்தனர்.