

ரேஷன் கார்டை காட்டினால் போதும் கூட்டுறவு வங்கிகளில் 50,000 ரூபாய் கடன் யார் வேண்டுமாலும் வாங்கிக்கொள்ளலாம் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டுறவுத்துறையால் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடனை 6 மாதத்திற்கு கட்டத் தேவையில்லை. கூட்டுறவு வங்கியில் ஒரு கிராம் தங்கத்திற்கு 3000 ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதி முதலமைச்சர் உத்தரவுப்படி எளிமையாக்கப்பட்டுள்ளது. 50,000 ரூபாய் கடன் யார் வேண்டுமாலும் வாங்கிக்கொள்ளலாம்.
பணப்புழக்கம் அதிகரிக்கும் வகையில் சாலையோர வியாபாரிகள், பெட்டிக்கடைகள், டீக்கடைகள், காய்கறி மற்றும் பூவியாபாரிகள் போன்ற சிறு கடைக்காரர்கள் தங்களது குடும்ப அட்டையின் நகலை மட்டும் வழங்கி 50,000 வரை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுக் கொண்டு குறைந்த வட்டியில் 350 நாட்கள் வரை தவணை முறையில் செலுத்தலாம்
ஒன்றிணைவோம் திட்டம் மூலம் மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது? திமுக அளித்த புகார் மனுக்களில் ரேஷன் கடை புகார் சம்பந்தமாகவோ, உணவு கிடைக்கவில்லை என்று எந்த புகார் மனுவும் இல்லை.
பத்து, இருபது பேருக்கு உதவி செய்து விட்டு, லட்சக்கணக்கில் உதவியதாக திமுக கூறுவது போல, ஒரு சில மனுக்களை வைத்துக்கொண்டு லட்சணக்கில் புகார் மனுக்கள் பெற்றுள்ளோம் என ஸ்டாலின் கூறுகிறார்.
திமுக தலைவர் ஸ்டாலின் குணம் கோணலாக உள்ளது. தமிழக மக்களிடையே முதல்வரின் பேருக்கு மேல் பேர் வாக்குகிறார் என்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் குறை கூறுகிறார்.
இக்கட்டான நேரத்தில் முதல்வரின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் குறை கூறும் ஸ்டாலினை பற்றி மக்கள் தெரிந்து கொள்ளாவார்கள். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.