

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிநாடு, வெளிமாநிலம், மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருவோரால் கரோனா தொற்று அதிகரித்தவண்ணம் உள்ளது.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் வெளியிடங்களில் இருந்து வந்து கரோனா கண்டறியப்பட்ட 37 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் குவைத்தில் குடும்பத்துடன் வசித்த மார்த்தாண்டத்தை அடுத்த கீழ்குளத்தை சேர்ந்த தம்பதியர் தங்களது 5 வயது குழந்தையுடன் திருவனத்தபுரம் விமான நிலையம் வந்துள்ளனர்.
அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டம் வந்தபோது களியக்காவிளை சோதனை சாவடியில் சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்கள் 3 பேருக்கும் தற்போது கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 40 பேராக உயர்ந்துள்ளது. குமரியில் இதுவரை 68 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.