

எதிர்க்கட்சியான திமுகவை எதிர்த்து ஆளுங்கட்சியான அதிமுக, ஜூன் 1-ம் தேதி ஒரு போராட்டத்தை அறிவித்திருக்கிறது. ’தமிழகத்தில் உயர் பதவியில் இருக்கக்கூடிய பட்டியலின மக்களைத் தொடர்ந்து இழிவாகப் பேசிவரக்கூடிய திமுக நிர்வாகிகளைக் கண்டித்தும், தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு திமுகவினரின் தரக்குறைவான பேச்சைக் கண்டிக்காத திமுக தலைவர் ஸ்டாலினைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் நடத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அனைத்து மாவட்டங்களிலும் காலை 10.30 மணி முதல் 11 மணி வரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 5 இடங்களில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மார்ச் 24-ம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த நேரத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவே போராட்டத்தை அறிவித்திருப்பது 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்படும் என்பதைச் சூசகமாகச் சொல்வது போலிருக்கிறது என்கிறார்கள் அரசியல் கட்சியினர்.
இதுகுறித்து அமமுக செய்தித் தொடர்பாளர் வீரவெற்றிப் பாண்டியன் நம்மிடம் கூறுகையில், "144 தடை உத்தரவு அமலில் இருக்கிறபோது 5 பேர் ஒன்றாகக் கூடுவதே சட்டவிரோதம். இதன்படி ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதையே தடுத்து வைத்திருக்கிறது அதிமுக அரசு. நிவாரணம் வழங்கிய குற்றத்துக்காக எங்கள் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் மீதே வழக்குப் போட்டார்கள். இப்போது இவர்கள் எந்த அடிப்படையில் போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்?
முதலில் இந்த இக்கட்டான நேரத்தில் பொறுப்பான ஆளுங்கட்சி செய்கிற காரியமா இது? இவர்களுக்கு அரசியல் செய்ய வேறு நேரமே கிடைக்கவில்லையா? திமுகவினர் தவறாகப் பேசினால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டியதும், கைது செய்ய வேண்டியதும் ஆள்பவர்கள்தானே? இவர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்?" என்றார்.