Last Updated : 30 May, 2020 03:59 PM

 

Published : 30 May 2020 03:59 PM
Last Updated : 30 May 2020 03:59 PM

தொல்லியல் ஆய்வுக்கான பகுதியில் மூதாட்டி உடலை அடக்கம் செய்ய முயற்சி: ஆதிச்சநல்லூரில் திடீர் பரபரப்பு

ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூதாட்டி உடலை புதைக்க தோண்டப்பட்ட குழி.

தூத்துக்குடி

இறந்த மூதாட்டியின் உடலை ஆதிச்சநல்லூர் தொல்லியல் பரம்பில் புதைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

உலக நாகரீகத்தின் தொட்டில் என ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணி கடந்த 25-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் பகுதியில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் 114 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறையினர் இந்த இடத்துக்குள் சிறு குழியை தோண்டக் கூட அனுமதிக்காமல் தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில் அருகேயுள்ள வீரளபேரி கிராமத்தை சேர்ந்தர் பாப்பாத்தி (98) என்ற மூதாட்டி வயது முதிர்வால் நேற்று இறந்தார். வீரளபேரியை சேர்ந்தவர்களை அடக்கம் செய்யும் பரம்பு பகுதியை தற்போது மத்திய தொல்லியல் துறையினர் வேலியிட்டு அடைத்துவிட்டனர்.

ஆனாலும் வீரளபேரியை சேர்ந்த மக்கள் தாங்கள் எப்போது அடக்கம் செய்யும் இடத்தில் பாப்பாத்தியை அடக்கம் செய்ய குழி தோண்டினர்.

இது குறித்து தகவல் கிடைத்தவுடன் மத்திய தொல்லியல் துறையினர் செய்துங்கநல்லூர் போலீஸில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு ஸ்ரீவைகுண்டம் துணை வட்டாட்சியர் சங்கரநாராயணன், டிஎஸ்பி சுரேஷ் குமார் ஆகியோர் தலைமையில் வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

தொல்லியல் பரம்பு பகுதியில் மூதாட்டியை அடக்கம் செய்யக்கூடாது என கூறி, பாப்பாத்தியம்மாளின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், வீரளபேரி இடுகாட்டுக்கு வேறு இடம் ஓதுக்கப்பட்டு, அந்த இடத்தில் பாப்பாத்தியை புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து தொல்லியல் பரம்பு பகுதியில் தோண்டப்பட்ட குழு மூடப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x