Published : 30 May 2020 01:25 PM
Last Updated : 30 May 2020 01:25 PM

வெட்டுக்கிளி படையெடுப்பு; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்க: தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

கரோனாவில் தமிழக அரசு காட்டி வரும் அலட்சியத்தை வெட்டுக்கிளி படையெடுப்பைத் தடுத்திடும் விவகாரத்திலும் தொடராமல், தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளத் தொடங்கிட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மே 30) வெளியிட்ட அறிக்கை:

"இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, விவசாயிகளையும் பொதுமக்களையும் பெரும் அச்சுறுத்தலுக்கும் அவதிக்கும் ஆளாக்கிவரும் நிலையில்; தமிழகத்தின் கிருஷ்ணகிரி- நேரலகிரி கிராமத்திலும், நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளிலும் படையெடுத்த வெட்டுக்கிளிகள், அங்குள்ள மக்களைப் பதற்றத்திற்கு ஆட்படுத்தி இருக்கின்றன.

பாலைவன வெட்டுக்கிளிகளுக்கும், நமது மண்ணின் தன்மைக்கேற்ற வெட்டுக்கிளிகளுக்கும் வேறுபாடு உண்டு என இயற்கை ஆர்வலர்களும், அறிவியலாளர்களும் தெரிவிக்கிறார்கள்; அதேசமயம், அதன் தாக்கம் குறித்து கவனமாக இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள்.

தமிழக அரசு, கரோனாவில் காட்டிய அலட்சியத்தைத் தொடராமல் வெட்டுக்கிளிகளால் ஏற்படும் இழப்பும் வந்து தம் தலையில் விழுந்துவிடுமோ என்ற பீதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்டு விடாமல் தடுக்க தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளத் தொடங்கிட வேண்டும்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x