

கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை இன்று (மே 30) ஆய்வு செய்தபின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"சென்னையில் தொடர்ந்து படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி வருகிறோம். சென்னையில் 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கரோனா அதிகமாக இருப்பதால் கல்லூரிகள் உட்பட 10 மையங்களை அமைத்து சென்னை மாநகராட்சி, மருத்துவக் குழு கண்காணிப்பில், காத்திருக்க வைக்காமல் கரோனா பரிசோதனை மேற்கொண்டு நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்கிறோம்.
புளியந்தோப்பு கே.வி.கேசவப்பிள்ளை பகுதியில் 1,400 படுக்கைகள் கொண்ட புதிய நவீன வசதிகள் கொண்ட இந்தக் கட்டிடத்தில் கரோனா மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது கட்டுப்படுத்தப்பட்ட பகுதி போன்றே இருக்கும். இங்கு 24 மணிநேரமும் சிசிடிவி கண்காணிப்பு இருக்கும். மருத்துவர்கள், செவிலியர்கள், பாரா மெடிக்கல் பணியாளர்களுக்கு இங்கு தனியறைகள் உள்ளன. பிபிஇ உட்பட அனைத்துப் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன. மருத்துவ வல்லுநர்கள் குழு வருவதற்கான வசதி உண்டு. நோயாளிகள், மருத்துவர்களுக்குத் தனித்தனியாக லிஃப்ட் வசதி உண்டு. ஒவ்வொரு தளத்திலும் ஆக்ஸிஜன் வசதி உண்டு.
லேசான அறிகுறிகள் மட்டும் உள்ள தொற்றுநோயாளிகள், வேறு நோய்கள் இல்லாத ஆரோக்கியமான கரோனா பாசிட்டிவ் உள்ளவர்கள், இன்றிலிருந்து இங்கு அனுமதிக்கப்படுவர். யாரையெல்லாம் அனுமதிக்கலாம் என்பதை மருத்துவக் குழு தான் முடிவு செய்யும்.
வீட்டிலேயே இருப்பது போன்ற உணர்வை இது நோயாளிகளுக்கு ஏற்படுத்தும். மொபைல் எக்ஸ்-ரே வசதி, ஆம்புலன்ஸ் வசதி இங்கு உண்டு.
சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 140 நகர சுகாதார நிலையங்களுக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மக்கள் செல்ல வேண்டும். இதுதவிர, களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பரிசோதிக்கின்றனர். கரோனா தொற்றுதான் எதிரி. தொற்று குறித்த வெறுப்பு வேண்டாம்.
யாருக்காவது ஏதாவது இருந்தால் முன்வந்து சொல்லுங்கள். அப்படி வந்தால்தான் உங்கள் குடும்பத்திற்குத் தொற்று பரவாமல் தடுக்க முடியும். சமூகப் பரவல் இல்லாத நிலையை உருவாக்க முடியும். கண்ணுக்குத் தெரியாத கரோனாவுடன் அரசு போராடிக்கொண்டிருக்கிறது. நேரடியாக வந்து பரிசோதிக்கும்போது உடல் குறைகள் இருந்தால் சொல்ல வேண்டும்.
நோய்த் தடுப்புப் பகுதிகளில் உள்ளவர்கள் பதற்றம் இன்றி அறிகுறிகள் இருந்தால் சோதித்துக்கொள்ள வேண்டும். பரிசோதனை செய்வதில் அரசுக்கு எந்தத் தயக்கமும் இல்லை".
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
அப்போது, தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்துள்ளது குறித்தும், அங்கு இறப்பு விகிதம் அதிகமாவது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "ஊரடங்கு சமயத்தில் அரசு மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. தனியார் மருத்துவமனைகளுடன் அரசு பேசி, அனைத்து வித சேவைகளையும் தொடங்க அறிவுறுத்தினோம். அதன்படி, சேவைகளை தனியார் மருத்துவமனைகள் தொடங்கின.
ஒரு சில இடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எங்களுக்கும் தகவல் வந்துள்ளது. இது நிச்சயமாக தவறு. இது சேவை செய்ய வேண்டிய தருணம். அரசு சேவை மணப்பான்மையுடன் களத்தில் நின்று பணியாற்றிக் கொண்டிருக்கிறது. இரவு பகல் பாராமல் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றுகின்றனர்.
தனியார் மருத்துவமனைகளும் சேவை மனப்பான்மையுடன் நோயாளிகளை அணுக வேண்டும். இதனை வேண்டுகோளாகவும் கண்டிப்பாகவும் சொல்கிறேன்.
ஏற்கெனவே அவர்களுடன் 2 கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். 2-3 நாட்களுக்குள் கட்டணத்தை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதைத்தாண்டி அதிக கட்டணம் வசூலித்தால் அரசு நடவடிக்கை எடுக்கும்.
பரிசோதனைக்கும் தனியார் மருத்துவமனைகளில் 4,500 ரூபாய் என ஐ.சி.எம்.ஆர். நிர்ணயித்தது. தமிழக முதல்வருக்குப் பணம் ஒரு பொருட்டல்ல. மக்களின் நலன்தான் முக்கியம். அதனால்தான் 10 லட்சம் ஆர்.டி. பி.சி.ஆர் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்டணமில்லாமல் அதிக பரிசோதனைகளை எடுக்கிறோம். அரசு மருத்துவமனைகளில் இலவசமாகப் பரிசோதிக்கிறோம்.
ஐ.சி.எம்.ஆர். நிர்ணயித்த 4,500 ரூபாயை விடக் குறைத்து வாங்க வேண்டும் என, தனியார் பரிசோதனை மையங்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளோம். தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டின்கீழ் இந்தப் பரிசோதனையை மேற்கொண்டால் ரூ.2,500 மட்டுமே கட்டணம் என அரசு நிர்ணயித்துள்ளது.
இது உலக அளவிலான பெருந்தொற்று. அவசர நிலை புதிய நோய்த்தொற்று,. இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.