

புதுச்சேரிக்கு சேவையாற்ற ஐந்தாம் ஆண்டில் நுழைகிறேன் எனவும், என்னை பொருத்தவரை 'கவுன்ட் டவுன்' தொடங்கி விட்டது என்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடங்கியுள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் இன்று (மே 30) நிறைவடைந்ததை தொடர்ந்து புதுச்சேரி மக்களுக்கு அவர் எழுதியுள்ள திறந்த மடல்:
"நான்கு ஆண்டுகளை துணைநிலை ஆளுநராக பூர்த்தி செய்துள்ளேன். ஒவ்வொரு நாளும் புதுச்சேரி மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் உயர்ந்த நோக்கத்தைக் கொண்டிருந்தது. சவால்கள் முக்கியமற்றது. எதுவும் எங்கள் ஆளுநர் மாளிகை அணியை தடுக்கவில்லை. இதற்கு கடந்த நான்கு ஆண்டுகளின் வரலாறே சாட்சி. இக்காலத்தில் ராஜ்நிவாஸ் மக்கள் நிவாஸ் ஆனது. வார இறுதி நாட்கள் ஆய்வுகளை மறந்து விடக்கூடாதுக். கரோனா இதையெல்லாம் மாற்றியுள்ளது. இதே முறையில் எதிர்காலத்தில் மீண்டும் செயல்படாமல் போக வாய்ப்புண்டு.
தற்போதைய பட்டியலில் நிதி மீள் உருவாக்கம் செய்வதே முதல் இடத்தில் உள்ளது. அரசுக்கு வரவேண்டிய சொந்த வருவாயை மறுக்கும் தற்போதைய கொள்கையை மறுபரிசீலனை செய்வது அவசியம். கலால்துறை மூலம் கணினி மூலம் மதுபான உரிமங்களை ஏலம் விடுவது தற்போதைய நிதி வருவாய்க்குத் தேவையாக உள்ளது. கேபிள் டிவி, சொத்து வரி, மின் நிலுவைத் தொகை ஆகியவற்றில் நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் உள்ள அரசு இட வாடகை, உரிம கட்டணங்களை மறு சீரமைப்பதில் பரிசீலனை அவசியம் தேவை. சுற்றுவா வருவாய் இழப்பு உள்ளதால் தற்போது கையிலுள்ள சொத்துகளின் வருவாயை அதிகரிக்க வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பான விஜயன் கமிட்டி அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் இன்னும் பலவற்றை சேர்க்க முடியும். இருந்தாலும் இவை உடனடி நடவடிக்கையில் உள்ளவை. தற்போதைய சூழலில் நியமிக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரியால் நேர்மையான செயல்படுத்தும் திறன் இவ்விஷயத்தில் தேவை.
முக்கியமாக, புதுச்சேரி மக்கள் தங்கள் நல்வாழ்வு, சமூகம் ஆகியவற்றில் தங்கள் சொந்த பொறுப்பை உணர்தல் அவசியம். புதுச்சேரிக்கு சேவையாற்ற ஐந்தாம் ஆண்டில் நுழைகிறேன். என்னை பொருத்தவரை 'கவுன்ட் டவுன்' தொடங்கிவிட்டது"
இவ்வாறு அதில் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.