Published : 30 May 2020 11:21 AM
Last Updated : 30 May 2020 11:21 AM

கரோனா: இந்த சூழலில் நீட் தேர்வை நடத்துவது குரூரமான கடமை உணர்வாக பார்க்கப்படும்; தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

கரோனா அச்சம் காரணமாக நடப்பாண்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (மே 30) வெளியிட்ட அறிக்கை:

"2020-21 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஏற்கெனவே அறிவித்தவாறு ஜூலை 26-ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ள தேசிய தேர்வு முகமை, அதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கியிருக்கிறது. கரோனா பரவல் அச்சம் காரணமாக மாணவர்கள் இப்போது எதிர்கொண்டு வரும் சூழலில் நீட் தேர்வை நடத்துவது குரூரமான கடமை உணர்வாக பார்க்கப்படும்.

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பரவல் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி மொத்தம் 1.74 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்தியா, அடுத்த இரு நாட்களில் ஜெர்மனியையும், பிரான்ஸையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இத்தாலிக்கு அடுத்தபடியாக 7-வது இடத்தை பிடித்து விடும். இன்றைய நிலையில் அமெரிக்காவை விட இந்தியாவில் தான் அதிக தொற்றுகள் ஏற்படுகின்றன. புதிய தொற்றுகள் எண்ணிக்கையில் பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்த சில நாட்களில் இந்த நிலை இன்னும் மோசமாகக்கூடும்.

சென்னை போன்ற நகரங்களில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஒவ்வொரு மாணவரின் தெருவிலும் குறைந்தது ஒருவர் அல்லது இருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் ஒவ்வொரு மாணவரின் அண்டை வீட்டிலும் சராசரியாக ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார். டெல்லியிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான் காணப்படுகிறது.

இதுபோன்ற நகரங்களில் வாழும் மாணவர்கள், தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் கரோனா தாக்கிவிடக்கூடாது என்ற அச்சத்திலும், மன உளைச்சலிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களால் எப்படி நீட் தேர்வை எழுதுவதற்கு தயாராக முடியும்?

இந்தியாவில் ஒரு சில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் இன்னும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படவில்லை. மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்ட பள்ளிகளில் மார்ச் மாதத்தில் 12-ம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கப்பட்டாலும் கூட, மார்ச் 19 முதல் 31-ம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வுகள் கரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, ஜூலை ஒன்றாம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.

தமிழகத்தில் கூட சில பாடங்களுக்கான 12-ம் வகுப்பு தேர்வுகளை கரோனா அச்சம் காரணமாக மாணவர்கள் எழுதாத நிலையில், அப்பாடங்களுக்கான தேர்வு ஜூன் 18-ம் தேதி நடைபெறவுள்ளது.

இவ்வாறாக ஜூலை 15 வரை பொதுத்தேர்வுகளுக்கு 12-ம் வகுப்பு மாணவர்கள் தயாராக வேண்டிய சூழலில், அடுத்த 10 நாட்களில் நீட் தேர்வுக்கு மாணவர்களால் தயாராக இயலாது. குறிப்பாக, தனிப்பயிற்சி மையங்களில் பயிலாமல், தங்களின் சொந்த முயற்சியில் மட்டுமே பயிலும் மாணவர்களால் நீட் தேர்வுக்கு தயாராவது என்பது சாத்தியமற்றதாகும்.

அதுமட்டுமின்றி, நீட் போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்கு பாடங்களை படித்திருப்பது மட்டும் போதாது; மன அமைதியும், மன திடமும் தேவை. கரோனா அச்சத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள மாணவர்களால் அமைதியாகவோ, மனதை ஒருமுகப்படுத்தியோ தேர்வு எழுத முடியாது.

இதற்கெல்லாம் மேலாக மாணவர்களின் தகுதியையும், திறமையையும் நீட் தேர்வு துல்லியமாக எடை போடுகிறது என்பது கடந்த 4 ஆண்டுகளில் நிரூபிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு மருத்துவக் கல்வி வணிகமயமாவதும் தடுக்கப்படவில்லை; தகுதியும், திறமையும் கொண்டவர்கள் பணம் இல்லாததால் மருத்துவக் கல்வியில் இடம் வழங்காமல் புறக்கணிக்கப்படும் அவலமும் மாறவில்லை.

இந்த அவலங்களுடன் ஒப்பிடும்போது, 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துவது மருத்துவக் கல்வியின் தரத்தை எந்த வகையிலும் குறைத்து விடாது. எனவே, நடப்பாண்டில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை கைவிட்டு, 12-ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை அரசு நடத்த வேண்டும்.

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு ஆகும். அதற்கான சட்டப்போராட்டம் நிறைவடைய நீண்ட காலம் ஆகும் என்பதால் தற்காலிகத் தீர்வாகவே இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வை மத்திய அரசே ரத்து செய்ய வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கிறது. அதேநேரத்தில், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய பாமக தொடர்ந்து சட்டப்போராட்டங்களை முன்னெடுக்கும்.

ஒருவகையில் பார்த்தால் நீட் தேர்வை நடத்துவதே தார்மீக நெறிகளுக்கு எதிரானதாகும். 2012-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு செல்லாது என்று 18.07.2013 அன்று அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.

அதை எதிர்த்து காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிபதி அனில்தவே தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு, நீட் தேர்வு செல்லாது என்ற 2013-ம் ஆண்டின் தீர்ப்பை திரும்பப்பெறுவதாக 11.4.2016 அன்று அறிவித்தது.

ஆனால், அதற்கான காரணம் எதையும் கூறாமல், நீட் தேர்வுக்கு எதிரான வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.

அதன்பின் 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட பிறகும், முதன்மை வழக்கை விசாரிக்காமல், நீட் தேர்வை தொடர்ந்து நடத்துவது நியாயமல்ல. நீட் தேர்வுக்கு எதிரான முதன்மை வழக்கை விரைந்து விசாரித்து, அவ்வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் நலன்களை பாதுகாக்கவும், சமூக நீதியை நிலை நிறுத்துவதற்காகவும் உச்ச நீதிமன்றத்தில் பாமக விரைவில் வழக்கு தொடரும்"

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x