Published : 30 May 2020 10:53 AM
Last Updated : 30 May 2020 10:53 AM

மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 50% ஒதுக்கீடு கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் மனு

டி.ராஜா: கோப்புப்படம்

புதுடெல்லி

மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 50% ஒதுக்கீட்டை வரும் கல்வியாண்டு முதல் அமலாக்க உத்தரவிட வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மனு தாக்கல் செய்துள்ளது.

இதுதொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இன்று (மே 30) வெளியிட்ட அறிக்கை:

"மருத்துவ கல்வியில், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை நாடு முழுவதும் வழங்கவும், தமிழ்நாடு அரசு தனது இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமலாக்க அனுமதிக்கவும் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் கட்டளை மனு தாக்கல் செய்துள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அதன் பொதுச் செயலாளரான டி.ராஜா, உச்ச நீதிமன்றம் முன்பாக நேற்று, மே 29 அன்று நாடு முழுமையிலும் மருத்துவக் கல்விக்கு 27 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு ஒதுக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, உச்ச நீதிமன்றத்தில் கட்டளை மனு தாக்கல் செய்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றம்: கோப்புப்படம்

இந்தக் கட்டளை மனு வாயிலாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தின் முன்பு வைத்துள்ள வேண்டுதல் வருமாறு:

'அகில இந்திய அளவில் மருத்துவ கல்விக்கான இடங்களை நிரப்புவது சம்பந்தமாக, தேர்வுகளுக்கான தேசிய வாரியம் 9:5:2020 அன்று முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு 2020-க்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த ஆவணங்களை ஆணையிட்டுத் தருவித்து, அந்த முடிவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

தமிழ்நாட்டில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் பட்டயப் படிப்புகளில், அகில இந்திய கோட்டா முறைக்காக, (மத்திய அரசின் மருத்துவ கல்வி நிறுவனங்கள் தவிர்த்து) மாநில அரசு ஒப்படைத்த மருத்துவக்கல்வி இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு (பிசி மற்றும் எம்பிசி சேர்ந்து) 50% ஒதுக்கீட்டை 2020-2021 கல்வியாண்டில் அமலாக்க உத்தரவிடவேண்டும்.

மேலும், இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு தமிழ்நாடு சட்டம் 1994-ன்படி, ஒதுக்கீடு வழங்குவதை தொடர்ந்து அமலாக்கி வரவும், அதேபோன்று மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களில் உள்ள இட ஒதுக்கீட்டு சட்டங்களை அமலாக்கவும் உத்தரவிட வேண்டும்.

இந்த மனு நிலுவையில் இருக்கும் நேரத்தில், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்காமல், 9.5.2020 இல் வெளியிடப்பட்டுள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு 2020 முடிவுகளின் அடிப்படையில் அகில இந்திய கவுன்சிலிங்கை எந்த வகையிலும் தமிழ்நாட்டில் தொடங்க கூடாது என எதிர்மனுதாரர் அரசாங்கங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் உச்ச நீதிமன்றத்தை கோரியிருக்கிறார்.

மேலும், இந்த மனு நிலுவையில் இருக்கும் நேரத்தில், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்காமல், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான இந்தாண்டுக்கான நீட் தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாட்டில் எந்தவிதத்திலும் முயற்சி மேற்கொள்ளக் கூடாது எனவும் எதிர்மனுதாரர் அரசாங்கங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் இந்த மனு கோருகிறது.

இந்த வழக்கின் சூழலையும் உண்மைகளையும் கருத்திற்கொண்டு இதற்கு பொருத்தமான யாதொரு உத்தரவையும் உச்ச நீதிமன்றம் வெளியிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டுகிறோம் என்று மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x