

வட சென்னை அனல் மின்நிலையம் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்துக்குள் திறக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில், பங்கேற்ற மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி கூறியதாவது:
தமிழகத்தில் எதிர்கால மின்தேவையை கருத்தில் கொண்டு முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது புதிய அனல் மின்நிலைய திட்டத்தை அறிவித்தார்.
இப்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வட சென்னை அனல் மின்நிலையம் வரும் ஜூன் மாதம் திறப்பதாக இருந்தது. எனினும் ஊரடங்கு காரணமாக தாமதமாகிவிட்டது. ஊரடங்கு முடிந்த பின்னர் வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்துக்குள் திறக்கப்படும்.
இதன்மூலம் 800 மெகாவாட் மின் உற்பத்தி கிடைக்கும். மற்ற அனல் மின்நிலையங்கள் 2023-2024-ம் ஆண்டில் முடிவடையும். நீர்மின் திட்டங்களை பொறுத்தவரை கொல்லிமலை மற்றும் நீலகிரியில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோடைகாலத்தில் 17 ஆயிரம் மெகாவாட் மின் தேவை என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது, மின்நுகர்வு குறைவாகவே உள்ளது. இதன்படி நாளொன்றுக்கு 14,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. அந்த வகையில் 3 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி மிகுதியாக உள்ளது.
நாமக்கல் எம்பி ஏ.கே.பி. சின்ராஜ் அரசியல் செய்வதற்காக தவறான தகவல்களை பரப்பி வருகிறார். நாமக்கல் எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கர் வீட்டில் முறைகேடான குடிநீர் இணைப்பு இருப்பதை நிரூபியுங்கள் என கூறிய நிலையில், அடிக்க வந்ததாக அவர் பொய் தகவலை பரப்புகிறார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
நாமக்கல் எம்பி ஏ.கே.பி. சின்ராஜ் நேற்று முன்தினம் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் தனது வீட்டுக்கு முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றிருப்பதாக” தெரிவித்தார்.
இதையறிந்த எம்எல்ஏ பாஸ்கர் நேற்று முன்தினம் மாலை பயணியர் மாளிகையில் தங்கியருந்த எம்பி சின்ராஜிடம் நேரில் சென்று, தன்மீதான புகார் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதனால், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.