

கரோனா ஊரடங்கால் மின் பயனீட்டு கணக்கெடுப்பு எடுக்காத நிலையில் கடந்த முறை செலுத் திய கட்டணத்தையே இந்த முறையும் செலுத்தலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம்அறிவித்தது.
உதாரணமாக, ஒரு நபர் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 350 யூனிட் உபயோகித்து இருந்தால் ரூ.680 மின் கட்டணம் மற்றும் நிலைக் கட்டணம் ரூ.30 சேர்த்து ரூ.710 செலுத்தியிருப்பார். மின்வாரிய அறிவிப்பின் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் இதே தொகையை மே முதல் வாரத்தில் செலுத்தியிருப்பார். கோடையின் கடுமையால் மே, ஜூன் மாதங்களில் 550 யூனிட் மின்சாரத்தை அவர் பயன்படுத்த வேண்டிவந்தால், அதற்கு அவர் ரூ.2,110 மற்றும் நிலைக்கட்டணம் ரூ.30 என ரூ.2,140-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆனால், மின்வாரியமோ ஏற் கெனவே கட்டணம் செலுத்திய 350 யூனிட்டோடு தற்போதைய 550 யூனிட்டையும் சேர்த்து 900 யூனிட்டுக்கு கணக்கிட்டு ரூ.4,420 மற்றும் நிலைக்கட்டணம் ரூ.30 சேர்த்து ரூ.4,450 கட்டணம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. அதன்பிறகு, அதில் கடந்த முறை செலுத்திய ரூ.680-ஐ (நிலைக்கட்டணம் அல்லாமல்) கழித்துவிட்டு ரூ.3,770-ஐ பெறுவதாக கட்டண விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி கணக்கிடும்பட்சத்தில், அந்த நபரி டம் இருந்து 550 யூனிட்டுக்கான கட்டணமான ரூ.2,140-க்கு பதிலாக கூடுதலாக ரூ.1,630 சேர்த்து வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து கேட்டபோது மின்வாரிய அதிகாரிகள் கூறிய தாவது: பொதுவாக, ஒருவர் 500 யூனிட் வரை பயன்படுத்தினால் ரூ.1,130 வரை மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், 501 முதல் 510 யூனிட் வரை பயன் படுத்தினால் ரூ.1,846 செலுத்த வேண்டும். 510 முதல் 1,180 யூனிட் வரை மற்றொரு கட்டண விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் கட்டண விகிதங்களை அடிப்படையாகக் கொண்டே கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்யப் பட்டுள்ளது. அதனால் அதிகரிக்கும் யூனிட் சார்ந்து இப்படிப்பட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மின் வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் உத்தரவின்பேரில், முந்தைய பில்லின் யூனிட்டை கழித்து விட்டு, தனியாக கணக்கிடும்படி கம்யூட்டரில் ப்ரோகிராம் செய்தால் இந்தப் பிரச்சினையை சரிசெய்ய முடியும் என்றனர்.
இதுகுறித்து மின் நுகர்வோர் சிலர் கூறியபோது, “மின்வாரிய நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்தி கருத்துகளைக் கேட்டு இப்பிரச்சினையை சரிசெய்ய வேண்டும்” என்றனர்.