கோயம்பேடு சந்தையை திறக்க வேண்டும்: வணிகர் சங்கம், காய்கறி வியாபாரிகள் கோரிக்கை

கோயம்பேடு சந்தையை திறக்க வேண்டும்: வணிகர் சங்கம், காய்கறி வியாபாரிகள் கோரிக்கை
Updated on
1 min read

கோயம்பேடு சந்தையை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசின் அறிவுறுத்தலை ஏற்று கோயம்பேடு மலர், காய், கனி சந்தைகள் அனைத்தும்கடந்த 5-ம் தேதி முதல் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. அரசின் வாக்குறுதிகளை ஏற்று மாற்று இடங்களில் வணிக சேவையை வழங்கி வரும் வணிகர்கள், பல்வேறு தொழில் முறை இடையூறு, தொழிலாளர் பற்றாக்குறை, போக்குவரத்து செலவு அதிகரிப்பு, விற்பனை வீழ்ச்சி போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, கோயம்பேடு சந்தையை மீண்டும்திறக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள துணி மற்றும் நகைக் கடைகள், சென்னையில் கிடங்கு தெருவில் உள்ள துணிக் கடைகள், கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் உள்ள மின்சாதன கடைகள், கொத்தவால்சாவடியில் உள்ள உணவு தானிய மளிகை கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கோயம்பேடு மலர், காய், கனி சந்தை வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன், முதல்வர் பழனிசாமிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோயம்பேடு சந்தையை நம்பியுள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, சந்தையை தூய்மைப்படுத்தி, உரிய கட்டுப்பாடுகளை விதித்து, விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தையில் அமைக்கப்படும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, நெரிசலைக் குறைத்து, சமூக இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in