

திருப்பூரை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கவிதா ஜனார்த்தனன். திருப்பூர் மாவட்டத்தில் கல்வி, விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் பெண்களின் மேம்பாட்டுக்கென பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருபவர். கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக சிரமப்படும் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை அரசும், தனியார் அமைப்புகளும் வழங்கி வரும் நிலையில், ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களை தேடிச் சென்று பெண்களுக்கு சானிடரி நாப்கின்களை ஊரடங்கு தொடங்கியது முதல் வழங்கி வருகிறார்.
இதுவரை 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு சானிடரி நாப்கின் வழங்கியதுடன், பொதுமக்கள் பலரது பாராட்டையும் பெற்றுள்ளார். இதுதொடர்பாக கவிதா ஜனார்த்தனன் கூறியதாவது:
ஊரடங்கு உத்தரவு முதலில் ஒரு மாதத்துக்குள் முடிவுக்கு வந்து விடும் என்று முதலில் கருதினோம். இதனால் எங்களது, ‘இனி ஒரு விதி செய்வோம்’ அமைப்பு மூலமாக சிரமப்படும் பொதுமக்களுக்கு முதலில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினோம். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், நிச்சயமாக வேலை இல்லாமல், கையில் பணம் இல்லாமல் வறுமையில் உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு சானிடரி நாப்கின் வாங்குவதில் சிரமம் இருக்கும் என்பதை உணர்ந்தோம்.
தற்போதுள்ள சுகாதாரமான சூழலில் இருந்து, அவர்கள் மீண்டும் பழைய காலத்துக்கு திரும்பி சென்று விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, அத்தியாவசியமாக கருதி சானிடரி நாப்கின்கள் வழங்க முடிவு செய்தோம். அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் போது, பெண்கள் உள்ள வீடுகளில் தேவையறிந்து சானிடரி நாப்கின் சேர்த்து வழங்கி வருகிறோம். தனியாகவும் தொழிலாளர்கள் நிறைந்த குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று வழங்கி வருகிறோம்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு நாப்கின்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை ஊரடங்கு முடியும் வரை தொடர்ந்து அளிப்போம். ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் அமைப்புகள், சானிடரி நாப்கினையும் சேர்த்து வழங்க வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு கவிதா ஜனார்த்தனன் தெரிவித்தார்.