Last Updated : 29 May, 2020 07:00 PM

 

Published : 29 May 2020 07:00 PM
Last Updated : 29 May 2020 07:00 PM

புலம்பெயர் தமிழர்களை அலைக்கழிக்கும் அரசு நிர்வாகம்: அந்தந்த மாவட்டத்தில் இறக்கிவிடுவதில் என்ன பிரச்சினை?

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து இதுவரை மொத்தம் 6 ரயில்கள் தமிழ்நாட்டிற்கு இயக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிரச்சினையை எதிர்கொண்டிருக்கிறார்கள் தமிழகப் பயணிகள்.

பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு முதல் ரயில் தமிழ்நாட்டிற்கு வந்தது, மராட்டிய வாழ் தமிழர்களுக்கும் தெரியாது, தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியாது. திடீரென 9.5.20 அன்று பண்டர்பூரில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு வந்த அந்த ரயிலில் வெறுமனே 962 பயணிகள் மட்டுமே இருந்தார்கள். அவர்கள் எல்லாம் வழிபாடு, சுற்றுலா நோக்கத்திற்காகச் சென்று சிக்கிக்கொண்டவர்கள். சிலர் சோலாப்பூரில் வேலை பார்த்த தொழிலாளர்கள். ஒரு ரயிலில் 22 பெட்டிகள் வரையில் இணைத்து 1,600 பேர் வரையில் அனுப்பலாம் என்றாலும், முறைப்படி அறிவிக்கப்படாததால், மராட்டியத்தில் தவித்த பலர் அந்த ரயிலைப் பயன்படுத்த முடியாமல் போனது.

அடுத்ததாக தமிழ் அமைப்புகளின் தொடர் வலியுறுத்தலுக்குப் பிறகு 18.5.20 அன்று புனேயில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. மொத்தம் 1,420 பயணிகள். அனைவருமே தமிழ்நாட்டில் இருந்து வேலைக்குச் சென்று பொதுமுடக்கத்தால் சிக்கிக்கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள். அந்த ரயில் விழுப்புரத்திலும், திருநெல்வேலியிலும் மட்டுமே நிற்கும் என்று சொன்னது ரயில்வே. திருச்சி அல்லது மதுரையிலும் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய பிறகே திருச்சியிலும் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் பிறகு, 24.5.20 அன்று 1,450 பயணிகளுடன் குர்லாவில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்ட ரயில், இடையில் விழுப்புரத்தில் மட்டுமே நிறுத்தப்பட்டது. 26.5.20 அன்று மும்பை சிஎஸ்டி நிலையத்தில் இருந்து 1,690 பயணிகளுடன் திருநெல்வேலி வந்த ரயில் இடையில் விழுப்புரம், திருச்சியில் மட்டுமே நின்றது. 27.5.20 அன்று மறுபடியும் மும்பை சிஎஸ்டி-யில் இருந்து 1,500 பயணிகளுடன் திருநெல்வேலிக்கு இயக்கப்பட்ட ரயிலும் விழுப்புரம், திருநெல்வேலியில் மட்டுமே நின்றது.

இதற்கிடையே 6-வது ரயில் மும்பையில் இருந்து புறப்பட்டு நேற்று (வியாழக்கிழமை) மதுரை வந்தது. அதில் இருந்து இறங்கிய 899 பேரில் வெறும் 39 பேர் மட்டுமே மதுரையைச் சேர்ந்தவர்கள். 700 பேர் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இப்படி ஒவ்வொரு முறையும் ரயிலில் வரும் தமிழர்களை அந்தந்த மாவட்டங்களில் இறக்கிவிடாமல், வெவ்வேறு மாவட்டங்களில் இறக்கி பஸ்ஸுக்கு பரிதவிக்கவிட்டு அனுப்புகிறார்கள் அதிகாரிகள். மும்பையில் இருந்து மிகமிக வேகமாக 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டிற்கு வந்துவிடும் இவர்கள், அங்கிருந்து சொந்த மாவட்டங்களுக்குப் போய்ச்சேர மேலும் ஒரு நாள் ஆகிறது.

இதுகுறித்து நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சியைச் சேர்ந்த முருகன் கூறுகையில், "தமிழ்நாட்டில் இருந்து பிஹார் மற்றும் உ.பி.க்குச் செல்லும் ரயில்கள் குறைந்தது 5 முதல் 10 ஸ்டேஷன்களில் ஆட்களை இறக்கிவிடுகின்றன. தமிழ்நாட்டிற்கு வரும் ரயில்களை மட்டும் வெறுமனே இரண்டு அல்லது மூன்று நிலையங்களில் மட்டுமே நிறுத்துகிறார்கள். இத்தனைக்கும் மும்பையில் ரயில் ஏறும்போதே, மாவட்ட வாரியாக அனைத்து பயணிகளின் பெயரையும் பிரித்துதான் பதிவு செய்கிறார்கள்.

திருச்சி பயணிகளை மதுரையில் போய் இறக்குவதும், விருதுநகர் பயணிகளை திருநெல்வேலியில் இறக்குவதும், திருநெல்வேலி பயணிகளை மதுரையிலேயே இறக்கிவிடுவதும் ஏன்? அந்த ரயில் அத்தனை ஊருக்கும் போகிறபோது, அந்தந்த ஊர்களில் இறக்கினால் என்ன? எப்படியிருந்தாலும் அனைத்து பயணிகளும் பரிசோதனை செய்யப்பட்டு, தேவைப்பட்டால் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவது நிச்சயம். அதே ரயிலில் போனால் கூடுதலாக ஒரு மணி நேரத்தில் சொந்த மாவட்டத்துக்குப் போய்விட முடியும். ஆனால், தேவையில்லாமல் ஏன் இப்படி அலைக்கழிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

மதுரையில் பயணிகளை மூட்டை முடிச்சுகளுடன் இறக்கி அவர்களை மறுபடியும் திருநெல்வேலிக்கு அனுப்ப, 30 பஸ்களை இயக்குவதற்கு, அந்த ரயிலையே திருநெல்வேலி வரையில் இயக்கினால் என்ன? அதேபோல புதுக்கோட்டைக்காரர்களை திருச்சியிலேயே இறக்காமல், மதுரைக்கு கொண்டுவந்து பஸ்சில் அனுப்புவது ஏன் என்றே புரியவில்லை. அவர்களை அழைத்துச் செல்வதற்காக அந்தந்த மாவட்ட போலீஸாரும், வருவாய் மற்றும் மருத்துவத்துறையினரும் தேவையில்லாமல் அடுத்த மாவட்ட ரயில் நிலையங்களில் காத்திருக்கிறார்கள் " என்றார்.

இதுபற்றி தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, "இது சிறப்பு ரயில். இரு மாநில அரசுகளும் ஒப்புக்கொண்டு பயணிகள் பட்டியலையும், இறங்க வேண்டிய நிலையங்களின் பட்டியலையும் தருகின்றன. அதன்படிதான் நாங்கள் ரயில்களை இயக்குகிறோம். தமிழ்நாடு அரசு வெறுமனே இரண்டு அல்லது மூன்று நிலையங்களில் மட்டுமே ரயிலை நிறுத்த அனுமதிக்கிறது. நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்றனர்.

தமிழக அரசு கவனிக்குமா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x