Last Updated : 29 May, 2020 06:09 PM

 

Published : 29 May 2020 06:09 PM
Last Updated : 29 May 2020 06:09 PM

மழைக்குப் பிந்தைய மதுரை: ஒரு ரவுண்ட் அப்!

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, தொடர்ந்து ஒரு மாதமாக மதுரையில் வெயில் சதமடித்தது. 'குமரி மாவட்டத்தில் தொடர்மழை, குற்றாலத்தில் தண்ணீர் கொட்டுகிறது' என்பது போன்ற பத்திரிகைச் செய்திகளை வியர்வையில் தொப்பலாய் நனைந்து கொண்டே மதுரை மக்கள் வாசிக்க வேண்டியதிருந்தது. இந்த நிலையில், மதுரையில் 2 நாட்களுக்கு முன்பு நல்ல மழை பெய்தது. நேற்று (வியாழக்கிழமை) மாலையிலும் வெளுத்து வாங்கியது மழை.

இன்று (வெள்ளி) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டிலேயே மிக அதிகமாக மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருந்தது. இதேபோல, மதுரை மாவட்டத்தின் இடையபட்டி 11 செமீ, திருமங்கலம், பேரையூர், தல்லாகுளம் 8 செமீ, மதுரை விமான நிலையம் 6 செமீ சோழவந்தான் 3 செமீ, வாடிப்பட்டி 2 செமீ என்று மழை பதிவாகியிருந்தது.

இன்று பகல் முழுவதும் மதுரையில் வானம் மேக மூட்டத்துடனே காணப்பட்டது. அவ்வப்போது சாரலும் விழுந்தது. இதனால் ஓரளவு வெப்பம் தணிந்தது. ஏற்கெனவே மதுரையில் ஊரடங்கு என்பது நடைமுறையில் இருக்கிறதா? என்று கேட்கிற அளவுக்கு சாலைகளில் மக்கள் கூட்டமும், வாகன ஓட்டமும் அதிகமாக இருக்கும். வெயில் தாக்கம் குறைந்திருந்ததால் இன்று இன்னும் அதிக கூட்டத்தைப் பார்க்க முடிந்தது.

ஏற்கெனவே குடிநீருக்காகத் திறக்கப்பட்ட தண்ணீருடன், மழை நீரும் சேர்ந்து வைகையில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஓடியது. ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் ஓடுகிற தண்ணீரை சித்திரையில் பார்க்கும்போது மனதில் உற்சாகம் கொப்பளிக்கிறது. வழக்கமாக சாக்கடைக்குள் நீந்தித் திரிகிற வாத்துக்கூட்டம் மழை நீரில் முங்கிக் குளித்தன.

சிறு மழைக்கே குளமாக மாறிவிடும் மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதி வழக்கம்போல நேற்றிரவு முழுக்க தண்ணீர் தேங்கி நின்றது. இம்முறை பாதிப்பு கொஞ்சம் அதிகம். பெரியார் பேருந்து நிலையம் தொடங்கி ரயில் நிலையம் வரையில் மேலவெளி வீதி முழுக்க தண்ணீர் குளம் போலப் பெருகிக்கிடந்தது. இன்று பகலில் அந்தத் தண்ணீர் எல்லாம் வற்றிவிட்டது என்றாலும், தண்ணீர் ஓடிய அடையாளமாக சாலையெங்கும் ஆற்று மணல் போல திட்டுக்கள் காணப்பட்டன.

சர்வோதய இலக்கியப் பண்ணை புத்தகக்கடைக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றினார்கள் அதன் ஊழியர்கள். தங்கரீகல் தியேட்டர் அருகே கடையோரத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் எல்லாம் மழை வெள்ளத்தில் நனைந்து போய்விட்டன. அந்த புத்தகத்தை வெயிலில் காய வைத்துக் கொண்டிருந்தார்கள் ஊழியர்கள். எல்லீஸ்நகர் பகுதியில் குடியிருப்புக்குள்ளும் தண்ணீர் புகுந்துவிட்டது.

நிரந்தர சந்தை கட்டிடங்களில் இருந்து, கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக திறந்த மைதானங்களில் காய்கனிக் கடை போட்டிருந்தவர்கள் இன்று வெயில் தாக்கம் குறைந்து சந்தோஷமாக இருந்தார்கள். இப்படி இன்னும் இரண்டு மழை பெய்தால், மதுரையின் கொதிப்பு அடங்கிவிடும் என்று மக்கள் நம்புகிறார்கள். அதேநேரத்தில் அதிக மழை பெய்தால், கரோனாவுக்குக் கொண்டாட்டமாகி விடுமோ என்ற பயமும் மக்களுக்கு இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x