

புதுச்சேரி அரசு இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் கரோனா வார்டில் பணியாற்றும் பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டி.ஒய்.எஃப்.ஐ) சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
இது குறித்து டி.ஒய்.எஃப்.ஐ புதுச்சேரி பிரதேச குழுவின் சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தினந்தோறும் கரோனா பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் காவல் துறையினர், துய்மைப் பணியாளர்கள் உள்ளிடோருக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார். கரோனா நோய் தடுப்புப் பணியில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் 50 லட்சம் ரூபாய் வரை காப்பீடும் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்புப் பிரிவில் பணிபுரியும் பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு கூலிகளைப் போல் உதவித் தொகையாக மாதம் 5,000 ரூபாய் வீதம் நிர்ணயிக்கப்பட்டு தினமும் 163 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல.
மகாத்மா காந்தி கிராமப்புற 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் மக்களுக்குகூட குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு 256 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித் தொகையாக மாதந்தோறும் 25,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அது போல் புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்களுக்கும் வழங்க வேண்டும்’ என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதுச்சேரி பிரதேசக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.