

தமிழ்நாடு ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொது முடக்கத்தால் ஆட்டோ ஓட்டுநர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஏஐடியூசி இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில், ’கடந்த 66 நாட்களுக்கு மேலாக ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களின் குடும்ப வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகி உள்ளதால் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதம் 7,500 ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்யாத முடிதிருத்தும் தொழிலாளர்கள், நெசவுத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கியது போல, பொது வில்லை பெற்றுள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், ‘ஊரடங்கு காலத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து ஆட்டோக்களையும் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும், ஆட்டோக்களுக்கான தகுதிச் சான்று புதுப்பித்தல், எல்ஐசி பாலிசி காலம், பெர்மிட் ஆகியவைகளை ஆறு மாத காலம் நீட்டிக்க வேண்டும், ஆட்டோ தொழிலாளர்கள் வாங்கிய வங்கிக் கடன், தினக்கடன், மாதக்கடன், வாரக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை ஆறு மாத காலம் தள்ளிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
திருச்சி மாவட்டத்தில் உறையூர், குறத்தெரு ஆட்டோ நிறுத்தத்தில் மாநகர ஏஐடியுசி ஆட்டோ சம்மேளன தலைவர் துரைராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டப் பொதுச் செயலாளர் க.சுரேஷ், மாவட்டத் தலைவர் வே.நடராஜா, வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கோ.ராமராஜ், அமைப்புசாரா தொழிற்சங்க ஆலோசகர் S.சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
மணப்பாறையில் கோவில்பட்டி சாலை ஆட்டோ நிறுத்தத்தில் நிஜாம் தலைமையிலும், மணவெளி மணவை பேருந்து நிறுத்தத்தில் வீரமணி தலைமையிலும், துவரங்குறிச்சி ஆட்டோ நிறுத்தத்தில் ஜெ. உசேன் தலைமையிலும் உப்பிலியபுரத்தில் பூபேஷ் தலைமையிலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.