

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜூன் 1-ம் தேதி முதல் சுழற்சி முறையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக கிழக்கு கடற்கரை பகுதியில் 61 நாள் மீன்பிடித் தடைக்காலத்தை 47 நாட்களாக மத்திய அரசு குறைத்துள்ளது.
இதனால் ஜூன் 15-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 1-ம் தேதி முதலே விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது தொடர்பான ஆலோசனை கூட்டம், தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காவல் துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், மீன்வளத்துறை இணை இயக்குநர் சந்திரா மற்றும் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம்.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் மொத்தமுள்ள 240 விசைப்படகுகளில் 120 விசைப்படகுகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களும், மீதமுள்ள 120 விசைப்படகுகள் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்களும் என சுழற்சி முறையில் செல்ல வேண்டும்.
மீன்பிடித் துறைமுகத்துக்குள் மீன்வளத்துறை அனுமதி பெற்ற மீனவர்கள், வியாபாரிகள் மட்டுமே வர வேண்டும். மீனவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். மீன் ஏலம் விடும்போது கூட்டம் சேரக்கூடாது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் தங்கு கடல் மீன்பிடித்தலுக்கு அனுமதிக்கக் கோரி மார்ச் 5-ம் தேதி முதலே கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஏப்ரல் 15 முதல் மீன்பிடித் தடைக்காலமும் அமலுக்கு வந்தது. இதனால் சுமார் 3 மாதங்களுக்கு பிறகு வரும் 1-ம் தேதி கடலுக்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.