Published : 29 May 2020 04:18 PM
Last Updated : 29 May 2020 04:18 PM

காவல் நிலைய பாத்ரூமில் கடந்த 3 ஆண்டில் வழுக்கி விழுந்தவர்கள் எத்தனை பேர்?: அறிக்கை அளிக்க காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்


சென்னை மாநகர காவல்துறைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உள்ள பாத்ரூமில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பேர் வழுக்கி விழுந்தனர் என்பது தொடர்பாக அறிக்கை அளிக்க சென்னை காவல்துறை ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

குற்றச் செயல்களில் அடிக்கடி ஈடுபடும் நபர்கள் காவல் நிலைய பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை, கால் முறிந்ததாக செய்தி வரும். அதேப்போன்று காவல் நிலைய பாத்ரூமில் சமூக ஆர்வலர் வழுக்கி விழுந்து கை முறிந்ததாக செய்தி வெளியானதன் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் காவல் நிலைய பாத்ரூமில் கடந்த 3 ஆண்டில் வழுக்கி விழுந்தவர்கள் எத்தனைபேர், போலீஸார் வழுக்கி விழுந்துள்ளார்களா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை அயப்பாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாக தேவேந்திரன் என்பவரை மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் நாதமுனி மற்றும் ஏட்டு சீனிவாசன் ஆகியோர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் வெளியில் வந்த தேவேந்திரன், மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை அவரது வாட்ஸ் அப் குழுவில் பரப்பியுள்ளதாக கூறப்பட்டது. இதுசம்பந்தமாக உதவி ஆய்வாளர் நாதமுனி அளித்த புகாரின் அடிப்படையில் புதன் இரவு (27/5)விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தேவேந்திரன், அம்பத்தூர் காவல் நிலைய குளிப்பறையில் வழுக்கி விழுந்து கை முறிந்து விட்டதாக செய்திகள் வெளியாகின.

பின்னர் அவர் ரிமாண்ட் செய்யப்பட்டார். இதுகுறித்து செய்தி வெளியிட்டிருந்த ஆங்கில நாளேடு ஒன்று இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடப்பதும், சிலருக்கு கை, கால் இரண்டும் முறிவது வாடிக்கை இது குறித்து ஆர்டிஐ ஆர்வலர்கள் காவல் நிலைய பாத்ரூமை சுத்தம் செய்யவும் கோரிக்கை வைத்ததும் நடந்துள்ளது. சில ஆர்வலர்கள் இது குறித்து மனித உரிமை ஆணைய கவனத்துக்கும் கொண்டுச் சென்றுள்ளனர் என்று பதிவிட்டிருந்தது.

இந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் துரை ஜெயசந்திரன், சென்னை காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் நான்கு கேள்விகளை கேட்டு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
அதன் விபரம் வருமாறு:

(1) கடந்த 2017 முதல் இதுவரை சென்னை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் குளியலறையில் வழுக்கி விழுந்தது தொடர்பாக எத்தனை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது?

(2) காவல்துறையினர் வழுக்கி விழுந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளனவா?

(3) குளியலறைகளில் முழுமையாக பராமரிக்காத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

(4) குளியலறையில் வழுக்கி விழும் சம்பவங்களை தடுப்பதற்கு ஆணையர் எடுத்த நடவடிக்கை என்ன?
என பல்வேறு கேள்விகளை எழுப்பி அது குறித்து இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x