

மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் இன்று மீண்டும் நீர் வரத்து ஏற்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலையில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கருப்பா நதி அணையில் 31 மி.மீ. மழை பதிவானது.
சங்கரன்கோவிலில் 25 மி.மீ., அடவிநயினார் கோவில் அணையில் 17 மி.மீ., தென்காசியில் 11.40 மி.மீ., குண்டாறு அணையில் 9 மி.மீ., செங்கோட்டையில் 7 மி.மீ., ஆய்க்குடியில் 5.20 மி.மீ., சிவகிரியில் 4 மி.மீ. மழை பதிவானது.
குற்றாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோடை வெயில் வாட்டி வதைத்ததால் நீர் வரத்து குறைந்து, அருவிகள் வறண்டன. இந்நிலையில், மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் இன்று மீண்டும் நீர் வரத்து ஏற்பட்டது.
கரோனா தொற்றைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருக்கும் வரை சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டிருக்கும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. சாரல் சீஸனையொட்டி வழக்கமாக மே மாதம் இறுதியிலேயே குற்றாலத்தில் வியாபாரிகள் கடைகள் அமைப்பது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டில் இன்னும் வியாபாரிகள் கடைகள் அமைக்கவில்லை. கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால், குற்றாலத்தில் கடைகள் நடத்தும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்