

அதிமுக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து கே.பி.முனுசாமியை நீக்கி, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்தியில், "அதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு பொறுப்பில் இருக்கும் கே.பி.முனுசாமி, இன்று முதல் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இவர் ஏற்கெனவே வகித்துவரும் கிருஷ்ணகிரி மாவட்டக் கழகச் செயலர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்.
அதிமுக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் பொறுப்பில், எடப்பாடி கே.பழனிச்சாமி (சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த கே.பி.முனுசாமியின் துறை மாற்றப்பட்டது. அவருக்கு தொழிலாளர் நலத்துறை ஒதுக்கப்பட்டது.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் அதிமுக தோல்வியுற்றதன் எதிரொலியாகவே கே.பி.முனுசாமி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.